ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவிடம் நேரில் சென்று விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் அதிரடி முடிவு எடுத்துள்ளது. இது தொடர்பாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை விசாரிக்க தமிழக உள்துறை செயலாளர் மற்றும் கர்நாடக சிறைத்துறைக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார். இவரது மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக அரசியல் கட்சி கூறி வந்தனர். மேலும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். 

இந்நிலையில் தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், காவல்துறை உயரதிகாரிகள், தலைமைச் செயலாளர்கள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட 130-க்கும் மேற்பட்டோர் ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்தனர். 

மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சசிகலா தரப்பில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விளக்கம் அளிக்க கோரப்பட்டது. அதற்கு 55 பக்க அபிடவிட் சசிகலா தரப்பில் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஜெ. மரணம் தொடர்பாக இன்னும் பலரிடம் விசாரிக்க வேண்டியுள்ளதால் ஆணையத்தின் காலத்தை நீட்டிக்குமாறு தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுத்தார். இதுவரை 3 முறை காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. விசாரணையை வெகுவிரைவில் முடிக்க வேண்டும் என்ற நோக்கில் ஆறுமுகசாமி ஆணையம் தீவிரமாக உள்ளது. 

இந்நிலையில் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை நேரில் சென்று விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக  தமிழக உள்துறைக்கும், பெங்களூர் சிறைத்துறைக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. சசிகலாவை சிறையில் விசாரிக்க அனுமதி பெற்றுத்தரக்கோரியும், அனுமதி வழங்கக்கோரியும் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.