2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் ஜெயலலிதா நடத்திய கூட்டணி பேச்சுவார்த்தை பாணியில் எடப்பாடி பழனிசாமி தற்போது கூட்டணி பேச்சுவார்த்தையை கிட்டத்தட்ட முடித்துள்ளார்.

கடந்த 2009ம் ஆண்டு தி.மு.க – காங்கிரசுக்கு எதிராக தமிழகத்தில் மெகா கூட்டணி அமைத்தார் ஜெயலலிதா. அந்த கூட்டணியில் அ.தி.மு.கவுடன் பா.ம.க., ம.தி.மு.க, இடதுசாரிக் கட்சிகள் இடம் பெற்று இருந்தன. அப்போது பா.ம.கவிற்கு 6 தொகுதிகளை வாரி வழங்கினார் ஜெயலலிதா. மதிமுகவிற்கும் கூட 4 தொகுதிகள் கொடுக்கப்பட்டன. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் சேர்த்து 6 தொகுதிகளை வழங்கினார். இறுதியாக அ.தி.மு.க 23 தொகுதிகளில் மட்டுமே களம் இறங்கியது. 

இதன் மூலம் அதற்கு முந்தைய 2004 தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளையும் வென்ற தி.மு.கவின் வெற்றிப் பயணம் 2009ல் தடுக்கப்பட்டது. 12 தொகுதிகளில் அ.தி.மு.க கூட்டணி வென்றது. இதே பாணியில் தான் தற்போது எடப்பாடி பழனிசாமியும் கூட்டணி வியூகம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பலம் வாய்ந்த தி.மு.க – காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக அதே போன்ற பலமான கட்சிகள் அவசியம் என்று எடப்பாடி கருதியுள்ளார். அதனால் தான் தமிழகத்தில் வாக்கு வங்கியே இல்லாத பாஜகவிற்கு வெறும் 5 தொகுதிகளை கொடுத்து கழட்டிவிட்டுள்ளார் எடப்பாடி. 5 தொகுதிகளுக்கு எல்லாம் அமித் ஷா வரமாட்டார் என்று பா.ஜ.க கூறியுள்ளது. 

அதனால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறி எடப்பாடி தரப்பு பாஜகவை அதிர வைத்துள்ளது. மேலும் பா.ஜ.க தலைவர்கள் இல்லாமலேயே பா.ம.கவை அழைத்து கூட்டணியை உறுதிப்படுத்தி 7 தொகுதிகளை கொடுத்து அனுப்பியுள்ளார் எடப்பாடி. இதன் மூலம் கூட்டணிக்கு யார் தலைமை என்பதையும் சொல்லாமல் சொல்லியுள்ளார் எடப்பாடி. எவ்வளவோ பா.ஜ.க தரப்பு முரண்டு பிடித்தும் 4 தொகுதிகள் என்பதில் இருந்து எடப்பாடி மாறவே இல்லையாம். இறுதியில் போனால் போகட்டும் என்று கூடுதலாக ஒரு தொகுதியை கொடுத்து கூட்டணியை முடித்துள்ளார் எடப்பாடி.

 

இந்த பாணி ஜெயலலிதா பின்பற்றுவது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். அ.தி.மு.கவை பா.ஜ.க மிரட்டி கூட்டணிக்கு ஒத்துக்கொள்ள வைத்துள்ளதாக வெளியாகும் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் எடப்பாடி இந்த விவகாரத்தில் நடந்து கொண்டதாகவும் பரவலாக பேச்சு அடிபடுகிறது. இதுவரை 12  தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் ஐந்து தொகுதிகள் கைவசம் உள்ளது. அதனை தே.மு.தி.கவிற்கு கொடுத்துவிட்டு 2009 தேர்தலை போல 2019 தேர்தலை அ.தி.மு.க எதிர்கொள்ள உள்ளது. 

மேலும் இதுநாள் வரை கடுமையாக விமர்சித்து வந்த ராமதாஸ் மற்றும் அன்புமணியை தேடி வரவழைத்தும் எடப்பாடி தான் யார் என்பதை காட்டியுள்ளார். அதே சமயம் அவர்களை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து தமிழர்களின் பாரம்பரியத்தையும் அவர்களிடம் வெளிக்காட்டியுள்ளார். பா.ம.க., பாஜக போன்ற அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட கட்சிகளையே எடப்பாடி அடக்கி ஆண்டிருப்பது தினகரன் தரப்பையும் ஸ்டாலின் தரப்பையும் எரிச்சல் அடைய வைத்திருப்பதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.