கடந்த சில வாரங்களாக பி.ஜே.பி.யை போட்டுத் தாக்கி வருகிறார் நாடாளுமன்ற துணை சபாநாயகரான தம்பிதுரை. அழகிரியின் பேரணியன்று அதை திசைதிருப்ப அமைச்சர் வீட்டில் ரெய்டை நடத்தினார்கள்! தி.மு.க.வை நோக்கி நகர்கிறது பி.ஜே.பி.! என்றெல்லாம் விமர்சனங்களை அள்ளி வீசி அமித்ஷாவையே அதிர வைத்தார். 

இந்நிலையில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் அவரது ரூட்டில் பி.ஜே.பி.யை பிய்த்தெடுக்க துவங்கியுள்ளார். ”தமிழகத்தில் மதவாத கட்சிகள் ஒருநாளும் காலூன்ற முடியாது. பி.ஜே.பி.யின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மதவாதம் மற்றும் கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வருகிறார். அவர் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.” என்று கூறியுள்ளார். இதையும் அப்படியே மொழிபெயர்ப்பு செய்து டெல்லிக்கு அனுப்பியுள்ளனர் தமிழக பி.ஜே.பி.யினர். 

கைக்கடக்கமாக இருந்த தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. ஏன் இப்போது அடுத்தடுத்து தங்கள் மீது பாய்கிறது? என்று யோசிக்க துவங்கியுள்ளது பி.ஜே.பி. அதற்கு ’நமக்கு விசுவாசமாக இருந்த வகையில் தமிழகத்தில் கடும் விமர்சனத்தை சந்தித்தது அ.தி.மு.க. அரசு. ஆனாலும் அவர்கள் விசுவாசத்தை கைவிடவில்லை. இதற்கு பின்னணி ரெய்டு பயம்! எனும் சுயநலன் தான் என்றாலும் கூட நாம் சொல்வதை அப்படியே நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள். 

ஆனால் தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு மங்கிக் கொண்டே போவதைப் பார்த்து நம் தலைமை தி.மு.க. பக்கம் சாய துவங்கியது. இது கடந்த சில வாரங்களாக வெளிப்படையாகவே அலசப்பட்டு வருகிறது. ஏற்கனவே நம் மீது காட்டிய பாசத்தினால் மக்களின் அபிமானத்தை இழந்த அ.தி.மு.க. தலைவர்கள், இப்போது நமது கூட்டணியையும் இழக்க வேண்டி வருமோ!? எனும் பயத்தில் அடுத்த கட்ட ஆயுதத்தை கையில் எடுத்துள்ளனர். அதுதான் பி.ஜே.பி. எதிர்ப்பு ஆயுதம். 

இதைத்தவிர வேறு வழியில்லை அவர்களுக்கு. ஒரு வேளை நாம் மீண்டும் அவர்களை அரவணைத்தால் அவர்களும் விமர்சனத்தை கைவிடுவார்கள். இல்லையென்றால் இப்படி அடுத்தடுத்து குதிக்கத்தான் துவங்குவார்கள், அவர்களை அடக்க ஒரே வழி ஒட்டு மொத்தமாக பல அமைச்சர்களின் வீடுகளிலும், அரசு அதிகாரிகளின் வீடுகளிலும் ரெய்டு நடத்துவதுதான்.” என்று சொல்லி சிரித்திருக்கிறார்கள்  பி.ஜே.பி.யின் டெல்லி முக்கியஸ்தர்கள். 

இதை தமிழக அமைச்சரவையும் ஸ்மெல் செய்துவிட்டது. இதன் ரியாக்‌ஷன் எப்படியிருக்கும்? என கவனிப்போம்.