jayakumar replied stalin

17 ஆண்டுகள் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து, தமிழ் இனத்தையே கொன்று குவித்த கட்சிதான் திமுக என அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.

மீனவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயகுமார் கலந்து கொண்டு, ரூ.1000 கோடிக்கு மேலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசுடன் நாங்கள் இணக்கமாக இருந்து, தமிழகத்துக்கு தேவையான நிதியை பெற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம். இதற்காக எங்களை மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக இருப்பதாகவும், பாஜக அரசின் பினாமி என்றும் திமுக செயல் தலைவர் கூறுவது தவறான கருத்து.

மத்திய அரசு இணக்கமாக இருப்பதால்தான், மாநிலத்துக்கு தேவையான அனைத்து சலுகைகளும் கிடைக்கிறது. அதற்காக அவர்களுடன் இணக்கமாக இருந்து வருகிறோம் என்பது கண்டிக்கத்தக்கது.

மத்தியில் ஆட்சி நடந்த 17 ஆண்டுகளில் தமிழ் இனத்தை கொன்று குவித்தவர்கள் திமுகவினர். இலங்கை பிரச்சனையில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு யார் எதிர்ப்பு குரல் கொடுத்தார்கள்.

அதேபோல் காவிரி, முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு உள்பட பல்வேறு பிரச்சனைகளை தாரைவார்த்து கொடுத்தது திமுகவின் ஆட்சியில். மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து கொண்டே, தமிழ் இனத்தை அழித்தவர்கள் திமுகவினர். அதனை மறந்துவிட்டு, எங்களை குறை சொல்வது ஏற்க முடியாதது.

காவிரி தண்ணீர் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டும் என ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தார். 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததும், அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த இலங்கைக்கு பொருளாதார தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றினார். அந்த துணிச்சல் யாருக்கு வந்தது. திமுகவில் ஒருவருக்காவது இருந்ததா…?

தமிழகத்தில் ஆட்சியை மட்டும் திமுகவினர் பிடித்தார்கள் தவிர, தமிகத்தை காப்பாற்றவில்லை. தமிழர்களையும் காப்பாற்றவில்லை. அழிக்கவே துடித்தார்கள். இலங்கையில் உள்ள மொத்த தமிழர்கள் இறப்பதற்கு காரணம் திமுகவினர்தான்.

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து என்ன செய்யக் கூடாதோ அதை அவர்கள் செய்தார்கள். ஆனால், நாங்கள் மத்திய அரசுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி, மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.