jayakumar pressmeet about ops eps team joining

எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைவது குறித்த பேச்சு வார்த்தைக்கு ஓபிஎஸ் அணியினர் வந்தால் நல்லது என்றும் வராமல் போனால் பரவாயில்லை என்றும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என அதிமுக இரண்டாக உடைந்தது. முதலமைச்சராக இருந்து ஓபிஎஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதேநேரத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதையடுத்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார்.

அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரன், தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஓபிஎஸ் விருப்பம் தெரிவித்தார். இதற்கு சசிகலா குடும்பத்தினரை கட்சியைவிட்டு நீக்க வேண்டும் என்றும், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என ஓபிஎஸ் அணியினர் நிபந்தனை விதித்தனர்.

இரு அணிகள் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இரு தரப்பிலும் குழுக்கள் நியமிக்கப்பட்டன. ஆனால் பேச்சு வார்த்தை நடைபெறவேயில்லை. இரு தரப்பு தலைவர்களும் தொடர்ந்து மாறுபட்ட கருத்துகளை வெளியிட்டு வந்ததால் இணைவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், இரு அணிகள் இணைவதற்கு குறித்து , இபிஎஸ் அணி சார்பில் பேச்சுவாஙாத்தைக்கான கதவுகள் திறந்தே இருப்பதாக தெரிவித்தார்.தற்போதும் இபிஎஸ் அணியுடன் ஓபிஎஸ் அணி இணைவதைத்தான் நாங்கள் விரும்புகிறோம் என தெரிவித்தார்.

ஓபிஎஸ் அணியினர் இணைப்பு பேச்சு வார்த்தைக்கு வந்தால் நல்லது என்றும் வராமல் போனால் பரவாயில்லை என்றும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.