அதிமுகவின் இரு அணிகளும் இணையாததால், கட்சியை நானே வழி நடத்தப்போகிறேன் என டிடிவி.தினகரன் தெரிவித்தார். மேலும், வரும் 5ம் தேதி அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் அழைத்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடத்த உள்ளதாக நேற்று அறிவித்தார்.

இதனால், அதிமுக அமைச்சர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இன்று மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடக்க இருக்கிறது. இதனால், அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதுபற்றி அமைச்சர் ஜெயகுமாரிடம், செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:-

அதிமுக தலைமை அலுவலகம் எங்களுடைய கட்சி அலுவலகம். இங்கு நாங்கள் எப்போது வேண்டுமானாலும் செல்வோம். எங்கள் வீட்டுக்கு செல்வதற்கு, எங்களை யார் கேட்க முடியும். தடுக்க முடியும். எங்கள் கட்சியை பற்றியும், ஆட்சியை பற்றியும் ஆலோசனை நடத்த இருகிறோம். அதற்காக நாங்கள் இன்று மாலை கூட்டம் நடத்துகிறோம்.

டிடிவி.தினகரன், அதிமுக அலுவலகத்தில் கூட்டம் நடத்த இருப்பதாக கூறியுள்ளார். அது அவரது விருப்பம். தனிப்பட்ட ஒருவரை பற்றி நாங்கள் எதுவும் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. அவர் கூறியது 5ம் தேதி, அதற்கு இன்னும் நாட்கள் இருக்கிறது.

தற்போது ஜெயலலிதாவின் ஆட்சி நடந்து வருகிறது. இதையே 5 ஆண்டுகளும் நல்ல முறையில் நடத்த வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். மக்களும் அதை விரும்புகிறார்கள். அதன்படி நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.