jayakumar organised minister meeting against ttvdinakaran
நிதி அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் 17 அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதால் எடப்பாடி தலைமையிலான ஆட்சி கவிழுமா என்ற கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் அசாதாரன சூழ்நிலை நடைபெற்று வரும் நிலையில், அடுத்தடுத்து பல்வேறு நிகழ்வுகள் நகர்ந்து கொண்டே செல்கின்றன.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் உச்சகட்ட குழப்பங்கள் நிலவி வருகிறது. முதலமைச்சராக ஆசைப்பட்ட சசிகலா சிறைக்கு சென்றார். முதலமைச்சராக இருந்த ஒ.பி.எஸ் பதவி பிடுங்கப்பட்டது. முகம் தெரியாத இ.பி.எஸ் முதலமைச்சரானார்.

துணைப்பொதுச்செயலாளராக பதவியேற்ற தினகரனும் சிறைக்கு சென்றார். எடப்பாடிக்கு வாக்களித்த எம்.எல்.ஏக்கள் மத்தியில் உச்சகட்ட குழப்பங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் என தமிழகத்தின் பரபரப்பு நீண்டு கொண்டே போகிறது.
இதனிடையே நேரம் கிடைக்கும் போதெல்லாம் பாஜக இடையில் புகுந்து எடப்பாடி ஆட்டைத்தை கலைத்து விட்டு வேடிக்கை பார்க்கிறது.
திமுகவும் தன் பங்கிற்கு முட்டி மோதித்தான் பார்க்கிறது. ஆனால் ஒன்றும் பலிக்கவில்லை.
இதனிடையே சசிகலாவுக்கு எதிரே போர்க்கொடி தூக்கிய ஒ.பி.எஸ் சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தார்.

அதற்கேற்றார் போல் தினகரன் இரட்டை இலை விவகாரத்தில் சிறைக்கு சென்றதும் சசிகலா குடும்பத்தை கட்சியை விட்டு வெளியேற்றி விட்டதாக எடப்பாடி தலைமையிலான அமைச்சர்கள் தெரிவித்து வந்தனர்.
இதைதொடர்ந்து சிறைக்கு சென்ற தினகரன் ஜாமினில் விடுதலையாகி வெளியே வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்திக்கையில் தான் கட்சியில் தொடர்ந்து இருப்பேன் எனவும் சசிகலாவை சந்தித்தபிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பேன் எனவும் தெரிவித்தார்.
இதற்கு பதிலத்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார் டிடிவி தினகரன் குறித்து கட்சி தலைமைதான் முடிவு எடுக்கும் என தெரிவித்தார்.

அதற்கு ஜெயக்குமார் பெரிய மேதை எனவும் அவர் கருத்து குறித்து பதில் சொல்லும் அளவிற்கு நான் பெரிய ஆள் கிடையாது எனவும் தினகரன் கருத்து தெரிவித்தார்.
இதைதொடர்ந்து தினகரன் சசிகலாவை சந்திக்க சிறைக்கு சென்றுள்ளார். இந்நிலையில், தலைமை செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் அறையில் 17 அமைச்சர்கள் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆலோசனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கவில்லை. மேலும் இதில், சி.வி சண்முகம், தங்கமணி, செங்கோட்டையன், காமராஜ், வெள்ளமண்டி நடராஜன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி வேலுமணி, சம்பத், சரோஜா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
