சசிகலாவின் இந்த செயல்பாடுகள் முழுக்க முழுக்க சட்டத்துக்கு எதிரானது. அவரது செயல்பாடுகள் அனைத்தும் தண்டனைக்குரிய குற்றங்களாகும். சட்டத்தை மீறி அவர் நடந்து கொண்டிருப்பதை தடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. 

பொதுச் செயலாளர் என்ற பெயரைப் பயன்படுத்தி அதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் சசிகலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் கொடுத்துள்ளார். ஏற்கனவே சசிகலா மீது மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை அதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லாததால் உடனே அந்த புகார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அதில் வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றார் சசிகலா, அதற்கிடையில் ஓபிஎஸ் இபிஎஸ் என்ற இரட்டை தலைமையின் கீழ் அதிமுக வந்தது. இந்நிலையில் சிறையில் இருந்து விடுதலையாகி உள்ள சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்க முடியாது என ஓபிஎஸ் இபிஎஸ் கூறிவருகின்றனர். இந்நிலையில் கட்சி தன்னிடம் உள்ளது என்றும், தானே அதிமுகவின் பொதுச் செயலாளர் என்றும் கூறிவரும் சசிகலா, பொதுச் செயலாளர் என்ற பெயருடன் அறிக்கை வெளியிடுவது, அதிமுக கொடி கட்டிய காரில் பயணிப்பது என உறுதிகாட்டி வருகிறார். இந்நிலையில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள எடப்பாடிபழனிசாமி தரப்பு, அவர் சட்டத்தை மீறி நடந்து கொள்வதாக குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில் அதிமுக கொடி கட்டிய காரில் சசிகலா பயணிக்கக் கூடாது என்றும், பொதுச்செயலாளர் என்று தன்னை அவர் கூறிக் கொண்டு அவர் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை மாம்பலம் காவல் நிலைத்தில் புகார் கொடுத்திருந்தார். இதுவரையில் அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால் மீண்டும் அதே போன்ற ஒரு புகாரை சென்னை மாநகர காவல் ஆணையருக்கு அவர் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் கூறியுள்ள விவரம் பின்வருமாறு:- அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருக்கக்கூடிய ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி, அவைத்தலைவர் ஆகியோரிடம் தான் காட்சி உரிமை உள்ளது. டெல்லி உச்சநீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையமும் இதை தெளிவு படுத்தியுள்ளது. ஆனால் கட்சியில் வீண் குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா சட்டத்தை மீறி பொதுச் செயலாளர் என தன்னை கூறி வருகிறார்.

இதேபோல் இரட்டை இலைக்கு உரிமை கொண்டாடி சசிகலா முன்வைத்த வாதங்களை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சசிகலா தரப்பில் செய்யப்பட்ட எல்லாம் மனுக்களும் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கட்சித் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தவும், சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்திலும், நேர்மையற்ற முறையில் அதிமுக பொதுச்செயலாளர் என தன்னை தானே கூறிவருகிறார். அதிமுகவுக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத அவர், பொதுமக்கள் முன்னிலையில் பொதுச்செயலாளர் என கூறி வருகிறார். அதிமுக பொதுச் செயலாளர் என்று கூறிக்கொண்டு தனது அடியாட்களை களம் இறக்கி கட்சியின் செயல்பாடுகளை சீர்குலைத்து, அதிமுகவினர் இடையே குழப்பத்தையும், மனக் கசப்பையும் ஏற்படுத்த முயற்சித்து வருகிறார். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டு வருகிறது. அவர் தன்னை பொதுச் செயலாளர் என்று கூறுவது பலரையும் திசைதிருப்பும் வகையில் உள்ளது. இது இந்திய தண்டனை சட்டம் 419 ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். 

உச்ச நீதிமன்றத்தால் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா அதிமுகவின் தலைவராக ஆள் மாறாட்டம் செய்து வருகிறார். எந்த அதிகாரமும் இன்றி கட்சிக் கொடியை ஏற்றுவது, தனது காரில் கட்சி கொடியை பயன்படுத்துவது, அதிமுக மற்றும் பொதுமக்களை ஏமாற்றும் வகையில் உள்ளது. இதுதொடர்பாக அதிமுக சார்பில் காவல் துறை இயக்குனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அதில் ஆதாரங்களுடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.17 -10 2021 அன்று காலை 10 மணி அளவில் சசிகலா தனது அடியாட்களுடன் சென்னை தியாகராய நகரில் உள்ள எம்ஜிஆர் அவர்களின் நினைவு இல்லத்துக்கு சென்று அந்த வளாகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் என்று அதிமுகவின் கொடியை ஏற்றிள்ளார். மேலும் அங்கு தன்னை பொதுச்செயலாளர் என குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது . தனக்கு சொந்தமில்லாத ஒரு அலுவலகத்தில் அவர் தனது அபிப்பிராயங்களை வெளிப்படுத்தியுள்ளார். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில் பொதுமக்களை தூண்டிவிடும் வகையில் அவரது செயல்பாடுகள் இருந்துவருகிறது.

சசிகலாவின் இந்த செயல்பாடுகள் முழுக்க முழுக்க சட்டத்துக்கு எதிரானது. அவரது செயல்பாடுகள் அனைத்தும் தண்டனைக்குரிய குற்றங்களாகும். சட்டத்தை மீறி அவர் நடந்து கொண்டிருப்பதை தடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே கடந்த 20-10-2021 மாம்பலம் காவல் நிலையத்தில் சசிகலா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி என்னால் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரையில் அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் இல்லை, எனவே தாங்கள் இந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்யவேண்டும், சசிகலா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.