லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு.. ஜெயக்குமாரின் மகளுக்கு மேலும் சிக்கல்..!
கும்மிடிப்பூண்டியில் லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் ஏற்கனவே பள்ளி மாணவன் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்மிடிப்பூண்டியில் லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் ஏற்கனவே பள்ளி மாணவன் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியா நவீனுக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. கடந்த வாரம் இந்த திருமண மண்டபத்தில் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது முதல் தளத்தில் உணவு பரிமாறுவதற்கு கீழ் தளத்திலிருந்து உணவு எடுத்து செல்லப்பட்ட போது லிப்ட் அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் வாலாஜாபாத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவன் சீத்தல் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் லிப்ட்டில் சென்ற விக்னேஷ், ஜெயராமன் ஆகிய 2 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்த, அவர்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், இன்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருமண மண்டப உரிமையாளரும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகளுமான ஜெயப்பிரியா தலைமறைவான நிலையில் ஊழியர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக ஜெயப்பிரியா உள்ளது குறிப்பிடத்தக்கது.