இளம் பெண் தொடர்பான சர்ச்சையில் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சிக்கியிருப்பது பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. தற்போது இந்த விவகாரம் பூதாகரமாகி வருகிறது. அமைச்சர் டி.ஜெயக்குமார் மீது தேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

அதிமுக எம்.பி. ஒருவருக்கு தம்பி பாப்பா பிறந்திருக்கிறது என்றும் எம்.பி.யின். தந்தை பிரபல விஐபிதான் என்றும் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் கூறியிருந்தார். அவரது இந்த பேச்சு, அரசியல் வட்டாரத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில்தான், ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது., அந்த ஆடியோவில் பேசும் ஆண் குரல், அமைச்சர் ஜெயக்குமாருடையது என்று பரவியது. 

ஆடியோ குறித்து விளக்கமளித்த அமைச்சர் ஜெயக்குமார், ஆடியோவில் இருக்கும் குரல் என்னுடையது அல்ல என்று மறுத்தார். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என் மீது களங்கம் விளைவிக்க வேண்டும் என்றே அவதூறு பரப்பப்படுகிறது என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில், உதவி கேட்டு வந்த பெண்ணை, அமைச்சர் ஜெயக்குமார், பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார் என்றும், பெண்ணின் வயிற்றில் வளரும் கருவை கலைக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கிறார் என்றும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுரேஷ்பாபு, அமைச்சர் மீது புகார் கொடுத்துள்ளார். 

மத்திய குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் புகார் கொடுத்திருக்கிறார். இந்த புகாரை பதிவு செய்த மனித உரிமை ஆணையம், நடவடிக்கைக்காக அனுப்பியிருப்பதாக தெரிகிறது.  பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண், சென்னை ராயபுரத்தைச் சேர்ந்தவர் என்றும், மீனவர் குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. அந்த பெண்ணுக்கு பல வரன்கள் பார்த்தும் ஒன்றும் அமையாததால், சாமியார் ஒருவரிடம் அவரது குடும்பத்தார் சென்றிருக்கிறார்கள். 

அப்போது அந்த சாமியார், பில்லிசூனியம் போல இருக்கு... இத எடுக்கணும்னா ஒன்றரை லட்சம் செலவாகும் என்று கூறி பணத்தை வாங்கி கொண்டார். ஆனால் பல மாதங்கள் கடந்தும் இளம் பெண்ணுக்கு எந்தவிதமான வரனும் அமையவில்லையாம்.

இதனால் கோபமான இளம் பெண்ணின் குடும்பத்தார், சாமியாரைப் பார்த்து, ஒன்றரை லட்சம் ரூபாயை திரும்ப கொடு என்று கேட்டுள்ளனர். சாமியாரிடம் இருந்து பணத்தை திரும்ப வாங்கவே, நம்ம மீனவ சமூகத்தைச் சேர்ந்த அமைச்சரைச் சந்தித்தால் தீர்வு கிடைக்கும் என்பதற்காகவே அமைச்சரைச் சந்தித்தோம் என்று இளம் பெண் தரப்பினர் கூறுகின்றனர்.