தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதை போலீசார் ஒடுக்குவதற்காக நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நீதிமன்றம் மூட உத்தரவிட்டது. அதற்கு, தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்கள் உபயோகிக்காமல் இருந்தால், பழுதாகிவிடும். இதனால் பல லட்சம் நஷ்டம் ஏற்படும் என உயர்நீதிமன்றத்தில், தொழிற்சாலை நிர்வாகம் மேல்முறையீடு செய்தது.

இதையொட்டி, இன்று ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய, மத்திய பசுமை தீர்ப்பாயம் ஆய்வு நடத்த உள்ளது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடியது மூடியதுதான். இனி அதை திறக்க வாய்ப்பே இலலை. இனி யார் திறக்க முயன்றாலும், அதற்கான வாய்ப்பு இல்லை.

அதிமுக ஊழல் செய்வதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டுகிறது. நிலக்கரி ஊழல் செய்த காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக பற்றி பேச எந்த தகுதியும் இல்லை.

திமுக தற்போது பஞ்சாயத்து கட்சியாகிவிட்டது. ஊரில் உள்ள பஞ்சாயத்துக்களை செய்வதற்கே அதில் உள்ளவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. மின்வாரியத்துக்கு வரவேண்டிய பணத்துக்காக ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, வழக்கு தொடர்ந்தார்.

ஆனால், மு.க.ஸ்டாலின் நாங்கள் ஊழல் செய்ததாகவும், வழக்கு தொடர்வதாகவும் கூறியுள்ளார். அவர் வழக்கு தொடர்ந்தால், அதை சந்திக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.