ஜெயா டிவியின் 20வது ஆண்டு விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அனுப்பிய வாழ்த்துச் செய்தி டி.டி.வி தினகரன் தரப்பை உச்சி குளிர வைத்துள்ளது. அ.தி.மு.கவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியாக இருந்து தற்போது தினகரனின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியாகியுள்ள ஜெயா டிவி தற்போது 20வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது.
ஜெயா டிவியின் 20வது ஆண்டு விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அனுப்பிய வாழ்த்துச் செய்தி டி.டி.வி தினகரன் தரப்பை உச்சி குளிர வைத்துள்ளது. அ.தி.மு.கவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியாக இருந்து தற்போது தினகரனின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியாகியுள்ள ஜெயா டிவி தற்போது 20வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும், சினிமா பிரபலங்களும் ஜெயா டிவிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு எல்லாம் உச்சமாக பிரதமர் மோடியிடம் இருந்து ஜெயா டிவிக்கு வந்த வாழ்த்து தான் தற்போது ஊடக உலகில் மட்டும் அல்லாமல் தமிழக அரசியலிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி ஜெயா டிவிக்கு தெரிவித்த வாழ்த்து ஜெயா செய்திகளில் மட்டும் இல்லாமல் ஜெயா பிளஸ் தொலைக்காட்சியிலும் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒளிபரப்பானது. அதிலும் பிரதமரின் வாழ்த்து செய்தியை ஹெட்லைனில் ஜெயா பிளஸ் ஒளிபரப்பி சந்தோசப்பட்டுக் கொண்டது. தற்போதுஅ.தி.மு.கவில்இருந்து தாங்கள் ஓரங்கப்பட்டதற்கும், சசிகலா சிறையில் இருப்பதற்குமே காரணம் பா.ஜ.க தான் என்று தினகரன் கூறி வந்தார். இந்த நிலையில் ஜெயா டிவிக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடியே கடிதம் அனுப்பியது தமிழக அரசியலில் பலராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.
கடிதத்தில் பிரதமர் அரசியல் ரீதியாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றாலும், ஜெயா டிவி தமிழகத்தில் மக்களின் மனம் கவர்ந்த தொலைக்காட்சி என்று புகழ்ந்திருந்தார். இது தொடர்பாக டெல்லி வட்டாரத்தில் விசாரித்த போது பொதுவாக ஜெயா டிவி என்று இல்லை எந்த ஒரு பிரபல நிறுவனமும் ஆண்டு விழா கொண்டாடும் போது அதற்கு வாழ்த்து தெரிவிக்குமாறு பிரதமர் அலுவலகத்தை அந்த நிறுவனங்களின் நிர்வாகிகள் அணுகுவது வழக்கம் என்று கூறினர். அந்த வகையில் ஜெயா டிவி நிர்வாகம் பிரதமர் அலுவலகத்தை வாழ்த்திற்காக அணுகியதாகவும் அதற்காகவே பிரதமர் டெம்ப்ளேட் வாழ்த்தில் கையெழுத்திட்டு அனுப்பியதாகவும் பா.ஜ.க தெரிவிக்கிறது. 
ஆனால் ஜெயா டிவி போன்ற ஒரு அரசியல் சார்புடைய தொலைக்காட்சிக்கு அவ்வளவு எளிதில் பிரதமர் வாழ்த்து தெரிவிக்கமாட்டார் என்கிறார்கள் தமிழக அரசியல் விமர்சகர்கள். தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியல் ரீதியாக அனைவரையும் அனுசரிக்க வேண்டும் என்பதே மோடியின் இந்த ஜெயா டிவி வாழ்த்து கடிதத்தின் அடிப்படையாக இருக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் தான் பிரதமரிடம் இருந்து கடிதம் வந்த தகவலை அறிந்த தினகரன் உடடினயாக அதனை ஜெயா டிவியில் ஒளிபரப்புமாறு கூறியுள்ளார். மேலும் அந்த கடிதம் குறித்த தகவலை அடுத்தநிமிடமே பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவுக்கும் அனுப்பியுள்ளார். கடும் நெருக்கடியில் சிக்கித்தவித்த தினகரனுக்கு பிரதமரிடம் இருந்து வந்த கடிதம் உச்சி குளிரவைத்துள்ளது என்கின்றனர் அவர்களுக்கு நெருக்கமானவர்கள்.
