ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. அரசின் பதவிக் காலம் 2020 ஜனவரி 5ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து அம்மாநிலத்தின் 81 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த நவம்பர் 30ம் தேதி தொடங்கி மொத்தம் 5 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

அதன்படி, கடந்த மாதம் 30ம் தேதி முதல் கட்டமாக 13 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. அதனை தொடர்ந்து  கடந்த 7ம் தேதி (20 தொகுதிகள்), 12ம் தேதி (17 தொகுதிகள்), கடந்த 16ம் தேதியில் (15 தொகுதிகள்) தேர்தல்கள் நடைபெற்றது. 

இந்நிலையில் 5வது மற்றும் இறுதி கட்டமாக ஜமா, ராஜ்மஹால் போரியோ, தும்கா உள்பட 16 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.
இதனையடுத்து பல முன்னணி செய்தி நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளன. 

அவற்றின் அடிப்படையில் பார்த்தால், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. தனது ஆட்சியை தொடர்ந்து தக்கவைக்க வாய்ப்பில்லை என்றும், காங்கிரஸ் கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் எனவும் தெரியவந்துள்ளது. 

இந்தியா டூடேவின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின்படி, பா.ஜ.க.வுக்கு 22 முதல் 32 இடங்கள் வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் ஜே.எம்.எம், காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி. கட்சிகள் அடங்கிய கூட்டணிக்கு 38 முதல் 50 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

ஆக, ஜார்க்கண்டில் பா.ஜ.க. தனது ஆட்சியை தக்கவைப்பது சந்தேகம்தான். இது நடந்தால் அந்த கட்சிக்கு பெரிய அடியாக இருக்கும் என அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.