உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரையிலும் 342 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரபடுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு எச்சரித்திள்ளது.

கொரோனா பரவுதலை தடுக்கும் வகையில் இன்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கபட்டு வருகிறது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் எனவும் கூறப்பட்டிருக்கிறது. கடைகள், உணவகங்கள், பொதுப்போக்குவரத்துகள் அனைத்தும் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் இன்று நடைபெற இருந்த முக்கிய நிகழ்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. இதுவரையிலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இந்தநிலையில் தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் சுய ஊரடங்கை நீடித்து தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. நாளை காலை 5 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது.