jallikattu will host in malaysia since 2018

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு முதல் மலேசியாவிலும் நடைபெற உள்ளது.

தமிழர்களின் பாரம்பரியமான வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. தமிழ்நாட்டில் கிராமங்களில் விவசாயத்திற்கு உழவு ஓட்டுவதற்கு காளை மாடுகள் பயன்படுத்தப்படும். தங்களின் வாழ்வாதாரமான விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் காளைகளை தங்கள் குடும்பத்தில் ஒருவராக மதித்து காளைகளை விவசாயிகளை வளர்த்துவருகின்றனர்.

காளைகளை விலங்காக இல்லாமல் தங்களில் ஒருவராகவே மதிக்கப்படும் காளைகளை கொண்டாடும் வகையில், உழவர் திருநாளான பொங்கல் பண்டிகையின்போது, மாட்டுப்பொங்கல் என்ற ஒரு தனி விழாவையே தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். பழங்காலம் முதல் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுவருகிறது. ஏறு தழுவதல், மஞ்சுவிரட்டு, வட மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு என பல பெயர்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. பழங்கால இலக்கியங்களிலும் சிந்து சமவெளி நாகரிகத்திலும் கூட ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. 

தமிழகத்தின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு தொடர்பான பழங்கால கல்வெட்டுகளும் கூட உள்ளன.

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டாலும்கூட மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், பேரையூர் ஆகிய இடங்களிலும் சிவகங்கை மாவட்டம் சிராவயல், சிங்கம்புணரி, புதூர், அரளிப்பாறை, புதுக்கோட்டை மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம், தேனி மாவட்டம் ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு பிரபலம். இப்பகுதிகளில் கோலாகலமாக நடத்தப்படுகிறது.

அதிலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, உலகளவில் பிரபலமான ஒன்று. இவ்வாறு காலம் காலமாக காளைகளை கொண்டாடும் வகையில் நடத்தப்பட்டுவரும் ஜல்லிக்கட்டில், காளைகளை துன்புறுத்துவதாகக் கூறி விலங்குகள் நல அமைப்பான பீட்டா, நீதிமன்றத்தை நாடி ஜல்லிக்கட்டிற்கு தடை உத்தரவை வாங்கியது.

அதனால், 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு அமைப்பினரும், தென் மாவட்டத்தினரும் எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டும் ஜல்லிக்கட்டு நடத்தமுடியவில்லை.

இதனால் வெகுண்டெழுந்த தமிழ் இளைஞர்களும் மாணவர்களும், வரலாற்றில் இடம்பிடிக்கக்கூடிய அளவிற்கு உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் சென்னை மெரினா உட்பட தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் களத்தில் இறங்கினர். 

இதையடுத்து காளைகளை காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலிலிருந்து நீக்கி அவசர சட்டம் இயற்றப்பட்டதை அடுத்து கடந்த முறை ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.

தமிழர்களின் வீரவிளையாட்டை தமிழகத்திலேயே பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகுதான் நடத்த முடிந்தது. ஆனால், இப்போது தமிழகத்தையும் கடந்து இந்தியாவையும் கடந்து மலேசியாவிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளது.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்றான மலேசியாவில், 2018-ம் ஆண்டு முதன்முறையாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளது. இதற்கான புரோமோ வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. 

தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை தமிழ்நாட்டிலேயே நடத்தவிடக்கூடாது என சிலர் விலங்குகள் நல ஆர்வலர்கள் என்ற போர்வையில் போராடி வந்தனர். இந்நிலையில், தமிழகத்தை கடந்து மலேசியாவிலும் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. 

மலேசியா மட்டுமல்லாமல், உலகம் முழுதும் பரந்து விரிந்திருக்கும் தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு உலகம் முழுதும் விளையாடும் நாள் வெகுதொலைவில் இல்லை. அப்போது, எந்த அந்நிய சக்தியாலும் எதிர்க்க முடியாத அளவில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு உச்சத்தில் இருக்கும். அதையும் மீறி சில அமைப்புகள் எதிர்க்குமேயானால், அப்போது ஜல்லிக்கட்டு வேண்டும் என்ற போராட்டம் தமிழர்களால் மட்டுமல்லாது உலகத்தினரால் ஒன்றுதிரண்டு நடத்தப்படும்.

அதன் முன்னோட்டம்தான் 2018-ல் மலேசியாவில் நடக்க இருக்கும் ஜல்லிக்கட்டு.