ஏன் பாஜக- சங்கபரிவார் கும்பலை எதிர்க்கிறோம் என்பதற்கு இந்தக் காட்சியே போதும். என்னே கொடூரம்? அந்த அப்பாவி மாணவர்களின் தோள்களில் காவிச்சாயத் துணிகளைப் போர்த்தி நெஞசங்களில் மதவெறுப்பு நஞ்சைப் பாய்ச்சும் சங்பரிவார்களின் குரூரத்தை எங்ஙனம் தடுக்கப் போகிறோம்?
அப்பாவி மாணவர்களின் தோள்களில் காவிச்சாயத் துணிகளைப் போர்த்தி நெஞ்சங்களில் மதவெறுப்பு நஞ்சைப் பாய்ச்சும் சங்பரிவார்களின் குரூரத்தை எங்ஙனம் தடுக்கப் போகிறோம்? என தொல்.திருமாவளவன் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் உடுப்பி பகுதியில் முஸ்லிம் மாணவிகள் அரசு மகளிர் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வர அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு சில இந்து மாணவ, மாணவியர் காவித் துண்டு அணிந்து கல்வி நிலையங்களுக்கு வர தொடங்கியது என இந்த விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்தது.

இந்நிலையில், மாண்டியாவில் உள்ள PES கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் பயிலும் இஸ்லாமிய மாணவி ஒருவர் பர்தா அணிந்து கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது, காவி துண்டு அணிந்திருந்த சில மாணவர்கள் மாணவியை முற்றுகையிட்டு ஜெய்ஸ்ரீராம் என்று முழக்கமிட்டனர். பல ஆண்கள் தன்னை முற்றுகையிட்டு முழக்கமிட்ட போதும் பயமின்றி கல்லூரிக்குள் நுழைந்த அப்பெண் அல்லாஹுஅக்பர் என்று கைகளை உயர்த்த கோஷம் எழுப்பிய படியே வகுப்பறையை நோக்கி முன்னேறினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. கூட்டத்தின் முழக்கத்துக்கு அச்சப்படாமல் பதில் குரல் கொடுத்த மாணவிக்கு பாராட்டுகள் என பலரும் பதிவிட்டு வருகின்றன. இந்நிலையில், திருமாவளவன் பாஜக குறித்து விமர்சித்தும், அந்த பெண்ணின் வீரம் குறித்து கவிதையாக பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- ஏன் பாஜக- சங்கபரிவார் கும்பலை எதிர்க்கிறோம் என்பதற்கு இந்தக் காட்சியே போதும். என்னே கொடூரம்? அந்த அப்பாவி மாணவர்களின் தோள்களில் காவிச்சாயத் துணிகளைப் போர்த்தி நெஞசங்களில் மதவெறுப்பு நஞ்சைப் பாய்ச்சும் சங்பரிவார்களின் குரூரத்தை எங்ஙனம் தடுக்கப் போகிறோம்? #பாஜக - தேசம் நாசம் என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல், மற்றொரு பதிவில் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
ஜெய் ஸ்ரீராம்
ஆண் கும்பலின்
ஆணவக் கூக்குரல்!
அல்லாஹூ அக்பர்
இளம் பெண்ணின்
ஒற்றைப் போர்க்குரல்!
புறம் மூடி
அகம் திறந்தாள்
மறம் தெறிக்க
களம் நடந்தாள்
வலது கும்பலை
எதிர்ப்பதற்காக
அவளின்
இடது கை உயர்ந்தது.
வெறுப்பு அரசியலை எரிப்பதற்காக
அவளின்
நெருப்பு குரல் நிமிர்ந்தது என்று பதிவிட்டுள்ளார்.
