விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் பேசிக்கொண்டிருந்தபோதே ஜெய் ஸ்ரீராம் என கோஷம் எழுப்பி பாஜகவினர் கலவரத்தை ஏற்படுத்தினர் என்றும், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை எல்.முருகன் போன்றோர் கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசிச் சென்றனர் என்றும், எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் வன்னியரசு கூறியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் பேசிக்கொண்டிருந்தபோதே ஜெய் ஸ்ரீராம் என கோஷம் எழுப்பி பாஜகவினர் கலவரத்தை ஏற்படுத்தினர் என்றும், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை எல்.முருகன் போன்றோர் கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசிச் சென்றனர் என்றும், எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் வன்னியரசு கூறியுள்ளார். கோயம்பேட்டில் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் பாஜக இடையே நடைபெற்ற மோதல் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது டிஜிபி அலுவலகத்தில் வன்னியரசு புகார் கொடுத்தார்.
அரசியல் ரீதியாகவும், சித்தாந்த ரீதியாகவும் திமுகவை காட்டிலும் பாஜகவை கடுமையாக எதிர்க்கும் கட்சியாக அடையாளம்பட்டு நிற்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி. திராவிட இயக்கங்களை காட்டிலும் பெரியார்- அம்பேத்கர் கருத்துக்களை மிகத்தீவிரமாக பேசும் கட்சியாக விடுதலை சிறுத்தைகள் இருப்பதே அதற்கு காரணமாகவும் உள்ளது என்றே சொல்லலாம். அந்த வகையில் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த தினமான ஏப்ரல் 14 அன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கும் போது பாஜக விசிக ஆகிய கட்சிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. அதில் இரு கட்சியை சேர்ந்த தொண்டர்களும் காயமடைந்தனர். பாஜகவை சேர்ந்த மூவருக்கு மண்டை உடைந்தது.

இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதலைத் தொடர்ந்து இரு கட்சிகளும் மாறி மாறி விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் சென்னை மயிலாப்பூரில் உள்ள தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் அலுவலகத்தில் டிஜிபி சைலேந்திரபாபுவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் வன்னியரசு மற்றும் துணைப் பொதுச்செயலாளர் ரஜினிகாந்த் ஆகியோர் புகார் கொடுத்தனர். புகார் அளித்த பின் வன்னி அரசு செய்தியாளர்களிடம் பேசினார். அதன் விவரம் பின்வருமாறு :- அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளன்று கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டு இருந்தபோது அங்கிருந்த பாஜகவினர் வேண்டுமென்றே அவருக்கு இடையூறு செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஜெய் ஸ்ரீராம் பாரத் மாதா கி ஜே என கூறி கலவரத்தில் ஈடுபட்டனர்.
பாஜகவை சேர்ந்தவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தினர், எனவே பாஜக வினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளோம். அந்த கலவரத்திற்குப் பின்னர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, எல். முருகன் ஆகியோர் கலவரத்தை தூண்டும் விதமாக பேசி விட்டு சென்றனர், மொத்தத்தில் தமிழகத்தில் கலவரத்தை தூண்டி அதன் மூலம் தங்களது கட்சியை வளர்த்தெடுக்க பாஜகவினர் முயற்சி செய்கின்றனர்.

அதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய பகலவன், வேலூர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் தீக்குளித்து இறந்தது தொடர்பாகவும் புகார் கொடுத்துள்ளோம், காவல்துறை உதவி ஆய்வாளர் கார்த்திக் வேண்டுமென்றே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை சாதியை சொல்லி அவமானப்படுத்தி அடித்துள்ளார். இதன் காரணமாக அந்த இளைஞர் தீக்குளித்து உயிரிழந்துள்ளார். இளைஞரின் உயிரிழப்புக்கு காரணமான காவலர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. ஆனால் அது மட்டும் போதாது அவரை உடனே கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
