Asianet News TamilAsianet News Tamil

அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாதீங்க.. நாங்க உங்க கூட இருக்கோம்..சூர்யாவுக்கு சப்போர்ட் செய்யும் திமுக கூட்டணி கட்சி

சூர்யா, விளிம்பு நிலை மக்களின் அவல நிலையைப் படமாக முன்னிறுத்திக் காட்டியது மட்டுமின்றி, அம்மக்களின் பாதுகாப்புக்குத் தமிழக முதல்வரிடம் ரூபாய் ஒரு கோடி நிதியளித்திருக்கிறார். பாதிக்கப்பட்ட நரிக்குறவ இனப் பெண்ணுக்கும் 10 லட்சம் ரூபாய் நிதி தந்திருக்கிறார். இவை அனைத்துக்காகவும் சூர்யா பாராட்டப்படுவது மட்டுமின்றி, தமிழ்ச் சமூகத்தால் கொண்டாடப்பட வேண்டிய படைப்பாளி ஆகியிருக்கிறார்.

jai Bhim Issue... Mutharasan supporting actor Surya
Author
Tamil Nadu, First Published Nov 16, 2021, 4:53 PM IST

சூர்யா பாராட்டப்படுவது மட்டுமின்றி, தமிழ்ச் சமூகத்தால் கொண்டாடப்பட வேண்டிய படைப்பாளி ஆகியிருக்கிறார். அவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அச்சுறுத்தல்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என முத்தரசன் கூறியுள்ளார். 

இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- பணம் சம்பாதிப்பதற்குத்தான் படம் எடுக்கிறோம். அதற்குத் தேவையான காட்சிகளை வைக்கிறோம். சமூகத்திற்கு கருத்துகளைக் கொண்டு சேர்ப்பது எங்கள் வேலையல்ல” என்று பகிரங்கமாகவே திரைப்படம் தயாரிப்பவர்களும், நடிப்பவர்களும் பேசுகிறார்கள். இதில் விதிவிலக்காக இருக்கும் ஒரு சிலரில், நடிகரும் தயாரிப்பாளருமான சூர்யா முக்கியமானவர்.

jai Bhim Issue... Mutharasan supporting actor Surya

அதிகார வர்க்கத்தின் கொடூரத்தை எதிர்த்துப் போராடும் ஏதுமறியாத ஒரு பழங்குடிப் பெண்ணின் கதை ஆவணப் படம்போல் இல்லாமல், அலுப்புத் தட்டாத திரைக்காவியமாக “ஜெய்பீம்“ படம் வந்துள்ளது. அதைப் பலர் பாராட்டி வரும் நிலையில் இதனை ஏற்க மனமில்லாத சிலர் ஏதாவது காரணத்தைக் கற்பித்துக் கொண்டு சூர்யாவையும், அவரது குடும்பத்தையும் குறிவைத்துத் தாக்குதல் நடத்துக்கிறார்கள். நடிகர் சூர்யாவை உதைத்தால் ஒரு லட்சம் ரூபாய் தருவதாக ஒரு அரசியல் கட்சியின் மாவட்டத் தலைவர் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

படத்தில் வரும் காட்சியின் பின்புலம், ஒரு சமூகத்தைக் குறிப்பதாகக் கூறப்பட்டபோது, அது அறியாமல் நடந்ததாக பதிலளித்ததோடு, மிகுந்த பொறுப்புணர்வோடு அந்தக் காட்சியையும் சூர்யா மாற்றியமைத்துள்ளார். அதையே குற்ற ஆதாரம் போலப் பயன்படுத்தி இழப்பீடு கோரி வழக்கு தொடரப்போவதாகத் தெரிகிறது. பழங்குடியினரை மனிதராகவே மதிக்காமல் அதிகார வர்க்கம் கொடுமைப்படுத்துவதைக் காட்சிப்படுத்தினால், தமது சமூகத்தை இழிவுபடுத்தி விட்டதாகப் பழங்குடியினர் பெயரில் இயங்கும் அமைப்பு கண்டிக்கிறது.

jai Bhim Issue... Mutharasan supporting actor Surya

ஒவ்வொரு மனிதரும் ஏதேனும் ஒரு சாதியை, மதத்தைச் சார்ந்தவராகவே நமது சமூகம் அடையாளப்படுத்துகிறது. ஒரு காட்சிப் பின்புலத்தில் வருவதைக் கூடத் தம்மைக் காயப்படுத்தி விட்டதாக வலிந்து காரணம் தேடினால், சமூகச் சாரமற்ற வெறும் மசாலாப் படங்களே தமிழுக்குப் போதும் என்றே பொருளாகும். ஆனால் தமிழ்த் திரைப்பட வரலாற்றில், சமூக நீதியை வலியுறுத்துகிற, ஆளுகிற அதிகார வர்க்கத்தை வலிமையாக எதிர்க்கிற திரைப்படங்கள் பல வெளிவந்துள்ளன. தற்போது சாதி, மதத்தை இழிவுபடுத்தி விட்டதாகக் குறைகூறுவதும், அத்துமீறி அச்சுறுத்துவதும் அதிகரித்துள்ளது. நவீன வாழ்க்கை முறை சாதியக் கட்டமைப்புகளை சாரமற்றதாக்கிக் கொண்டிருக்கும் நிலையில், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான உத்தியாக சாதியும், மதமும் மறுகட்டமைப்பு செய்யப்படுகின்றன.

jai Bhim Issue... Mutharasan supporting actor Surya

அந்தந்தச் சாதிகளைச் சார்ந்தவர்களே இந்த முயற்சிகளை அலட்சியப்படுத்தும்போது, பிற சமூகங்களிடமிருந்து தமது சாதி, மதத்தைச் சார்ந்தவர்களைத் தம்மால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற தோற்றத்தை ஏற்படுத்த, பொதுவான சமூகக் கருத்துக்களை கூறுவோரை அச்சுறுத்துவதும் சாதி, மத மோதல் போக்கை முன்னிறுத்துவதும் வாடிக்கையாகிக் கொண்டிருக்கிறது. சூர்யா, விளிம்பு நிலை மக்களின் அவல நிலையைப் படமாக முன்னிறுத்திக் காட்டியது மட்டுமின்றி, அம்மக்களின் பாதுகாப்புக்குத் தமிழக முதல்வரிடம் ரூபாய் ஒரு கோடி நிதியளித்திருக்கிறார். பாதிக்கப்பட்ட நரிக்குறவ இனப் பெண்ணுக்கும் 10 லட்சம் ரூபாய் நிதி தந்திருக்கிறார். இவை அனைத்துக்காகவும் சூர்யா பாராட்டப்படுவது மட்டுமின்றி, தமிழ்ச் சமூகத்தால் கொண்டாடப்பட வேண்டிய படைப்பாளி ஆகியிருக்கிறார்.

jai Bhim Issue... Mutharasan supporting actor Surya

அவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அச்சுறுத்தல்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. சூர்யா, அவரது படங்களாலும், செயல்முறைகளாலும் தமிழ் மக்கள் மட்டுமின்றி இந்தியாவிலும், நாடு கடந்தும் கூட பெருமதிப்புப் பெற்றிருக்கிறார். மனிதத்தை நேசிக்கும் மனிதர்கள் அனைவரும் தன்னோடு இருக்கிறார்கள் என்பதை அவர் நினைவில் கொண்டு, அச்சுறுத்தல்களைப் புறந்தள்ளி மென்மேலும் சமூக அக்கறையுள்ள படங்களைத் தர வேண்டும். இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டுள்ள சூர்யாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்றும் துணை நிற்கும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம் என முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios