9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 22ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்களுக்கும் அரசுக்கும் இடையே சுமூக தீர்வு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்திய ஜாக்டோ ஜியோ அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து ஏராளமான நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அரசின் எச்சரிக்கையையும் மீறி போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்கள் உள்பட ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் தமிழகம் முழுவதும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து 44 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவையில் 5 ஆசிரியர்களும், திருப்பூரில் 17 ஆசிரியர்களும், வேலூரில் 4 ஆசிரியர்களும், தருமபுரியில் 19 ஆசிரியர்களும் பணியிடை நீக்கம் செய்து  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதேபோல போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளைக்குள்  28.01.19 பணிக்கு திரும்பிவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை  எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பணிக்கு திரும்பிவிட்டால், பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களுக்கு மட்டும் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று கூறியுள்ள நிலையில், திட்டமிட்டபடி ஜாக்டோ-ஜியோ போராட்டம் நாளையும் தொடரும் என ஜாக்டோ-ஜியோ நிர்வாகி மீனாட்சிசுந்தரம் திருச்சியில் அறிவித்துள்ளார். மதுரையில் பேசிய ஜாக்டோ-ஜியோ நிர்வாகி சுரேஷும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். மேலும் தற்காலிக ஆசிரியர் நியமனத்தை எதிர்த்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெவித்துள்ளார்.