J. Death TTV Dinakaran investigative commission to summon!

ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து, நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு டிடிவி தினகரன், இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழக அரசின் உத்தரவுப்படி ஜெயலலிதா மரணம் குறித்து, ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையிலான கமிஷன், விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதா மரணம் தொடர்பான தகவல் மற்றும் ஆதாரங்களை வைத்திருப்போர் ஒப்படைக்கலாம் என விசாரணை ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால், ஜெயலலிதாவுடன் இருந்த சசிகலா குடும்பம் சார்பில், அது குறித்து எந்த தகவலும் ஆணையத்தில் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு முந்தைய நாள், தினகரன் ஆதரவாளரான, முன்னாள் எம்.எல்.ஏ., வெற்றிவேல், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், ஜெ., 'ஜூஸ்' குடிப்பது போன்ற வீடியோ காட்சியை வெளியிட்டார். இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

விசாரணை கமிஷனில், வீடியோவை வழங்காமல், அவர் தன்னிச்சையாக வெளியிட்டது தொடர்பாக, விசாரணை கமிஷன் சார்பில், போலீசில் புகார் அளிக்கப்பட்டது. வீடியோ நகல் மற்றும் வேறு ஆதாரங்கள் இருந்தால், அவற்றை ஒப்படைக்கும்படி, வெற்றிவேலுக்கு, விசாரணை ஆணையம் இரு நாட்களுக்கு முன் சம்மன் அனுப்பியது.

மேலும், தேர்தல் விதிமுறைகளை மீறி ஜெயலலிதா வீடியோவை வெளியிட்டதால் அவர் கைது செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து தலைமறைவான வெற்றிவேல், வாக்கு எண்ணிக்கையின்போது கூட வெளியில் வரவில்லை. இந்த நிலையில் வெற்றிவேல் தரப்பு வழக்கறிஞர்கள், விசாரணை கமிஷன் அலுவலகத்திற்கு வந்து, வீடியோ பதிவு செய்த சி.டி.யை ஒப்படைத்தனர்.

இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு டிடிவி தினகரன், இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா, மறைந்த ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வரும் 7 நாட்களுக்கள் ஆவணங்கள், ஆதாரங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.