திமுக அவசர செயற்குழு கூட்டத்தில், கருணாநிதியின் வடிவமாக ஸ்டாலினை திமுகவினர் பார்ப்பதாகவும் விரைவில் திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளதாகவும் ஜெ.அன்பழகன் பேசினார். 

கருணாநிதியின் மறைவை அடுத்து, திமுக அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றுவருகிறது. அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள கலைஞர் அரங்கத்தில் செயற்குழு நடந்துவருகிறது. அழகிரி போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், பரபரப்பான அரசியல் சூழலில் இந்த செயற்குழு நடந்துவருகிறது. 

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், செயல் தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி, பொன்முடி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், க.அன்பழகன் மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் செயற்குழு உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், திமுகவின் 19 அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். 

செயற்குழுவில் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டி.கே.எஸ் இளங்கோவன், கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியின் மக்கள் நல திட்டங்களை பட்டியலிட்டார். 

பின்னர் பேசிய திமுக எம்.எ.ஏ ஜெ.அன்பழகன், போர்க்கொடி தூக்கியுள்ள அழகிரிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார். கருணாநிதியின் வடிவத்தில்  செயல் தலைவர் ஸ்டாலினை பார்க்கிறோம். விரைவில் ஸ்டாலின் தலைவராக உள்ளார் எனக்கூறி ஸ்டாலின் தலைவராக உள்ளதை உறுதிப்படுத்தினார். 

ஏற்கனவே ஆதங்கத்தில் உள்ள அழகிரிக்கு திமுக செயற்குழுவில் கட்சி நிர்வாகிகளின் பேச்சு, மேலும் ஆதங்கத்தை அதிகப்படுத்தியுள்ளது. கருணாநிதியின் விசுவாசிகளும் கட்சி தொண்டர்களும் தன் பக்கமே உள்ளனர் என அழகிரி நேற்று பேசியபோதும், அப்படியெல்லம் கிடையாது; திமுகவினர் கட்டுக்கோப்பாக உள்ளனர் என்றும் திமுகவினர் யாருடனும் தொடர்பில் இல்லை என அன்பழகன் தான் பதிலடி கொடுத்தார்.