மூன்று முறை எம்.எல்.வாக தேர்வான ஜெ.அன்பழகன், மூன்று முறையும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வாகவே இருந்தவர். ஒரு முறை கூட ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வாக அவர் பேரவையில் பணியாற்றியதில்லை.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன், சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை காலமானார். முதன் முறையாக 2001-ம் ஆண்டில் தியாகராய நகர் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட அன்பழகன், 2011, 2016-ம் ஆண்டுகளில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். இந்த மூன்று முறையுமே ஜெ.அன்பழகன் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வாகவே பணியாற்றியவர்.
கடந்த 1996-ம் ஆண்டில் தியாகராய நகர் தொகுதியில் அவருக்குப் போட்டியிட வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால், அப்போது அந்தத் தொகுதி கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டதால், செல்லக்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது திமுகதான் ஆட்சியைப் பிடித்தது. ஆனால், அவரால் பேரவைக்கு செல்ல முடியவில்லை. 2001-ம் ஆண்டில் முதன் முறையாக தியாகராய நகரில் போட்டியிட்ட அன்பழகன், வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். அப்போது அதிமுக ஆட்சியைப் பிடித்ததால், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வாக சபைக்குள் நுழைந்தார். 2006-ம் ஆண்டில் மீண்டும் தியாகராய நகரில் ஜெ.அன்பழகன் போட்டியிட்டார். ஆனால், அன்றைய அதிமுக வேட்பாளரும் தற்போது திமுகவில் ஐக்கியமானவருமான வி.பி. கலைராஜனிடம் ஜெ.அன்பழகன் தோல்வியடைந்தார். அப்போது திமுக ஆட்சிக்கு வந்தபோதும், அன்பழகன் தோல்வியடைந்ததால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வாக சபைக்கு செல்ல முடியவில்லை.
இதன்பின் தியாகராய நகரிலிருந்து தொகுதி மாறி சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிகளில் 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிட்டு அன்பழகன் வெற்றி பெற்றார். ஆனால், இந்த இரு முறையும் அதிமுக ஆட்சியமைத்ததால், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வாகவே அன்பழகனால் பணியாற்ற முடிந்தது. குறிப்பாக 2011-ல் சென்னையில் இரு தொகுதிகளை மட்டுமே திமுக வென்றது. ஒன்று, மு.க. ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதி. இன்னொன்று, ஜெ.அன்பழகன் போட்டியிட்ட சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி  தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.


2021 தேர்தலில் திமுக ஆட்சியைக் கைப்பற்றி, ஜெ.அன்பழகனும் வெற்றி பெற்றால், அவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று அவருடைய ஆதரவாளர்கள் பேசி வந்தது உண்டு. அவரை வருங்கால அமைச்சர் என்றே அவருடைய ஆதரவாளர்கள் பார்த்தனர். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வாகப் பணியாற்றும் நாளை ஜெ.அன்பழகன் எதிர்பார்த்து காத்திருந்தார். மக்களைக் கவரும் வகையில் நலப் பணிகள் பலவற்றை மேற்கொண்டுவந்தார். ஆனால்,  கொரொனா என்ற காலன் அவரை கொண்டுசென்றுவிட்டது என்று அவருடைய ஆதரவாளர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.