தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது என நடிகர் ரஜினி காந்த் தெரிவித்துள்ளார், போயஸ் தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.  

ஜனவரி மாதம் புதிய அரசியல் கட்சி தொடங்க போவதாகவும் அதற்கான தேதியை டிசம்பர் 31-ஆம் தேதி அறிவிக்க இருப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த இந்த அறிவிப்பை ரஜினி வெளியிட்டார். இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்ட அவர், தமிழகத்தில் வரும் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என கூறியுள்ளார். 

மாற்றுவோம் எல்லாத்தையும் மாற்றுவோம் என்றும், இப்போது இல்லேன்னா எப்பவும் இல்ல என கருத்து பதிவிட்டுள்ளார். வரப்போகிற சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற, ஆன்மீக அரசியல்  உருவாக்குவது நிச்சயம். அற்புதம்... அதிசயம்... நிகழும்... என்று பதிவிட்டுள்ளார். ரஜினியின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை மிகப்பெரிய உற்சாகத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் செய்தியாளரை அவர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது, தேர்தலில் நான் வெற்றி பெற்றால் அது மக்களின் வெற்றி, அதில் தோற்றால் அது மக்களின் தோல்வி என்றே அர்த்தம்.  உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தோம், அதேபோல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தோம், ஆனால் கொரோனா காரணமாக  முடியவில்லை, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் சுற்றுப்பயணம் செய்வது ஆபத்து என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் அதை பொருட்படுத்தாமல் என் உயிரே போனாலும் மக்களே முக்கியம் என களம் இறங்கி உள்ளேன். அரசியல் மாற்றம் தேவை... கட்டாயம் நிகழும் இவ்வாறு ரஜினி கூறினார்.