7 பேர் விடுதலைக்காக கவர்னரை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சந்தித்திருப்பது கபட நாடகம் என அதிமுக விமர்சித்துள்ளது. அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் இது குறித்து கூறியிருப்பதாவது:  

இதோ பாருடா... 7 பேரில் நளினிக்கு மட்டும் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றலாம், மற்றவர்களை உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தூக்கில் போடலாம் என அன்று தூபமிட்டவர்தான் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி. அதுமட்டுமல்லாமல் கருணை மனு மீதான தீர்ப்பு நீண்ட நெடிய அளவுக்கு காலதாமதம் ஆனதால் அதனை காரணமாக வைத்து உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட் டோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்ட நிலையில், நளினி, முருகன் உட்பட 7 பேரும் சிறையில் இருந்து விடுதலை ஆவதற்கான வாய்ப்பு ஒன்றும் உருவானது. 

ஆனால் அப்போதும் ஒரு உள்நோக்க அறிக்கையை வெளியிட்டு அதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தெரிவித்த கருத்துக்களை எதிர்த்து கருணாநிதி வெளியிட்ட அபத்தமான அந்த அறிக்கை தான் 7 பேரின் விடுதலைக்கு இரண்டாவது முறையாக முட்டுக்கட்டை போட்டது. ஆனால் மறைந்த புரட்சித்தலைவி அம்மா இப்படி உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியான மறுநாளே அமைச்சரவையை கூட்டி 7 பேரையும் விடுதலை செய்வதற்கு தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், அப்போதும் திமுக தாங்கள் முட்டு தாங்கும் இத்தாலி  காங்கிரசை ஏவி விட்டு உச்சநீதிமன்றத்தில் 7 பேர் விடுதலைக்கு இடைக்கால தடை வாங்குவதற்கும் திரைமறைவு சக்தியாக செயல்பட்டது.

அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு சட்ட பிரிவு 161 கீழ் 7 பேர் விடுதலை குறித்து மாநில அரசு முடிவெடுக்கலாம் என தீர்ப்பளிக்கவே, 2018 ஆம் ஆண்டு செப்டம்பர்  9 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூடி மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தின்படி சட்டப் பிரிவு 161 இன் கீழ் ஏழு பேரையும் விடுதலை செய்கிறோம் என முடிவெடுக்கப்பட்டது.அந்த தீர்மானம் தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டு இன்றுவரை  அது முடிவெடுக்கபடாத நிலையில் இருந்து வருகிறது,

இப்படி 7 பேர் விடுதலைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் முட்டுக்கட்டை போட்ட காரணியாக இருந்து வரும் திமுக, ஊரையும் உலகையும் ஏய்ப்பதற்கு ஆடுகிற பித்தலாட்டங்களில் ஒன்றுதான் ஆளுநரை சந்தித்து 7 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்துகிறோம் என்னும் நாடகங்கள். மேலும் சமீபத்தில் உள்துறை அமைச்சர் தமிழகம் வந்த போது 7 பேர் விடுதலை குறித்து தமிழக முதலமைச்சர் வலியுறுத்தி இருக்கும் நிலையில், அதன் விளைவாக 7 பேர் விடுதலைக்கான வாய்ப்பு கூடி வருவதை உணர்ந்து கொண்ட திமுக, நாங்கள் போய் ஆளுநரிடம் மனு கொடுத்தோம், அதனால்தான் அது நிறைவேற்றப்பட்டு விட்டது என்று எதிர்காலத்தில் ஊளையிடுவதற்கு ஆரூரார் மைந்தன் ஆளுநர் மாளிகைக்கு போயிருக்கிறார் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

எப்படியோ பித்தலாட்டம் பித்தலாட்டம் பித்தலாட்டம் என்பது தான் திமுகவின் மொத்த அரசியல் என்னும்போது இத்தகைய பாசிச இயக்கத்தை படுகுழியில் போட்டு புதைக்க வேண்டிய பொறுப்பு தமிழகத்தின் வாக்காளர்களுக்கு உண்டு அல்லவா.? இவ்வாறு குத்தீட்டி பகுதியில் விமர்சிக்கப்பட்டுள்ளது.