குஷ்புவை காங்கிரஸ் தொண்டர்கள் கவர்ச்சி நடிகையாகவே  பார்த்தனர் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ் அழகிரி நடிகை குஷ்புவை விமர்சித்திருந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்பது மூளை வளர்ச்சி இல்லாத கட்சி என்றும், கே.எஸ் அழகிரி தலைவர் வேடத்தில் நடிக்கிறார் என்றும் குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்.

நேற்று திடீரென காங்கிரஸ் கட்சியின் அடிப்படை  உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்து நடிகை குஷ்பூ சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார். ஆனால் அதற்கு முன்னதாகவே காங்கிரஸ் கமிட்டி அதிரடியாக குஷ்புவை கட்சியிலிருந்து  நீக்குவதாக அறிவித்து அதிரடி காட்டியது. குஷ்பு காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணையபோகிறார் என கடந்த சில வாரங்களாக வதந்திகள் இருந்த நிலையில், அவர் பாஜகவில் இணைந்து அதை உண்மையாக்கியுள்ளார். நேற்று டெல்லியில் பாஜகவில் சேருவதற்காக தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகனுடன் குஷ்பு டெல்லியில் உள்ள பாஜக அலுவலகம் வந்தார். அப்போது பாஜக தலைவர் ஜெ.பி நட்டாவை சந்தித்த பின்னர் அவர் பாஜக தேசிய செயலாளரும், தென்மாநில பொறுப்பாளருமான சி.டி ரவி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற சிறப்பாக பாடுபடுவேன் என்றார். மோடி நாட்டை சரியான பாதையில் வழி நடத்துவதால் பாஜகவில் இணைந்ததாகவும் அவர் கூறினார். இந்நிலையில் டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய குஷ்புவுக்கு தமிழக பாஜகவினர் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு சென்று அங்கு செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:  மக்களுக்கு நல்லது செய்யவே நான் பாஜகவில் இணைந்துள்ளேன், பதவிக்காகவோ பேரம் பேசியோ கட்சியில் சேரவில்லை என்றார். அதுமட்டுமின்றி காங்கிரஸில் தான் இருந்தபோது மனசாட்சியின்றி தான் பாஜகவை விமர்சித்ததாகவும், வேளாண் சட்டத்தை கொண்டுவந்ததே காங்கிரஸ் கட்சிதான் என்றார். 

இருக்கிற இடத்திலும் விசுவாசத்தை காட்டித்தான் வந்துள்ளேன், இரண்டு ரூபாய் வாங்கிக்கொண்டு என்னைப் பற்றி வதந்தி ட்விட்டர் போட்டது பாஜகவினர் இல்லை காங்கிரஸ் கட்சியினர்தான் என தாக்கினார். தொடர்ந்து பேசிய அவர்,  தற்போது எனது அரசியல் முடிவுகளுக்கு எனது கணவர் சுந்தர் சி காரணம் என்று கூறப்படுகிறது, ஆனால் அது உண்மை இல்லை, இங்கு பெண் ஒருவர் புத்திசாலியாக இருக்க கூடாது என்று நினைக்கிறார்கள், என்னை வெறும் கவர்ச்சி நடிகை என கூறியவர், தலைவர் வேடத்தில் நடிக்கிறார் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி பெயரைக் குறிப்பிடாமல் குஷ்பு விமர்சித்தார். அதேபோல் பாஜகவின் சேருவதற்கு என் கணவர் சுந்தர் சி காரணம் இல்லை எனவும் குஷ்பு விளக்கம் அளித்துள்ளார்.