சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரைடு பற்றிய பரபரப்பு அடங்குவதற்குள், போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கரை குறி வைத்துள்ளது வருமான வரித்துறை.

கரூர் தொகுதியில் வெற்றி பெற்று போக்குவரத்து துறை அமைச்சரானவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

கடந்த ஆட்சியில், போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு வழித்தடங்கள் வழங்கிய சர்ச்சையில் இந்த விஜயபாஸ்கரின் பெயரே பலமாக அடிபட்டது. இந்நிலையில், கரூரில் வெற்றிபெற்று அதே போக்குவரத்து  துறைக்கு அமைச்சரானார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

மத்திய அரசின் பணமதிப்பு குறைப்பு நடவடிக்கையின் போது, பேருந்து  வழித்தடங்களின் மதிப்பை, பத்து மடங்கு உயர்த்தி, கருப்பு பணத்தை வெள்ளையாக்க பல பேருந்து உரிமையாளர்களுக்கு உதவி செய்ததது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் இவர் மீது  உள்ளது.

ஆனாலும், ஓ.பி.எஸ் அணிக்கு சில எம்.எல்.ஏ க்களை அனுப்பி வைத்த இவர், இப்போது வருகிறேன், அப்போது வருகிறேன் என்று போக்கு காட்டி வருகிறாராம். தம்பிதுரை விதித்துள்ள தடையின் காரணமாகவே, அவர் ஓ.பி.எஸ் அணிக்கு வருவதற்கு தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

ஆனாலும், புதுக்கோட்டை விஜயபாஸ்கர் ரைடில் சிக்குவதற்கு, பல முக்கிய வழிகளை அடையாளம் சொன்னவர் கரூர் விஜயபாஸ்கர் என்றும், தினகரனுக்கு ஒரு சந்தேகம் உள்ளது.

இந்நிலையில் பொறுத்து, பொறுத்து பார்த்த ஓ.பி.எஸ், மத்திய அரசுக்கு கொடுக்கும் தகவல்களில், இதுவரை கொடுக்காமல் இருந்த  போக்குவரத்து துறை சம்பந்தப்பட்ட தகவல்களையும் அனுப்பி விட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அமைச்சர் கரூர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்த வருமான வரி துறை ஆயத்தமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விஜயபாஸ்கரை அமுக்கினால், மற்ற அமைச்சர்களின் பிடிகளும் இறுகும் என்பதால், அடுத்த டார்கெட் இவரே என்று கூறப்படுகிறது.

ஒரே மாநிலத்தில், ஒரே அமைச்சரவையில், ஒரே பெயர்களை கொண்ட இரு அமைச்சர்கள், வருமான வரி சோதனையில் சிக்கி, சின்னா பின்னமாகப் போவது தமிழகமாகத்தான் இருக்கும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.