தமிழகத்தில் ஊராட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் வார்டு வரையறை முழுமையாக நிறைவடையும் வரையில் தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று திமுக சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்த தீர்ப்பு திமுகவிற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு வரையறை முழுமையாக நிறைவடைந்த பிறகு தேர்தலை நடத்த வேண்டும் என திமுக வழக்கு தொடர்ந்ததாகவும் அதை தான் தற்போது உச்சநீதிமன்றமும் கூறியிருப்பதாக ஸ்டாலின் கூறியிருக்கிறார். ஆகவே இது திமுகவிற்கு கிடைத்த வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் வெற்றி என்றார்.

மேலும் மக்களை முறைப்படி சந்தித்து தேர்தலை சந்திக்க திமுக துணிச்சலோடு இருப்பதாகவும் அதிமுக அரசும் அவ்வாறு சந்திக்க வேண்டும் என கூறியுள்ளார். உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு நடைமுறையை அதிமுக அரசு முறையாக பின்பற்றாததே இவ்வளவு குளறுபடிகளுக்கும் காரணம் என்றும் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.