தென் தமிழகத்தின் தூத்துக்குடி, நெல்லை மாவட்ட கடற்கரைபகுதிகளில் தாது மணல் எடுத்து முறைகேடாக விற்பனை செய்ததில் சுமார் 2500 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத சொத்துக்களும் 800 கோடி ரூபாய் வரி மோசடி செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திசையின்விளையில் வி.வி.எஸ்.மினரல்ஸ் என்னும் ஆலையைத்தொடங்கி அதில் கார்னெட், இலுமினெட் உள்ளிட்ட தாதுக்களைப் பிரித்தெடுத்து உலகமுழுவதுமுள்ள நாடுகளுக்கு விற்பனை செய்துவந்தார் வைகுண்டராஜன். 

இதில் சம்பாதித்த பணத்திற்கு சரியாக வரி செலுத்தவில்லை.  மத்திய அரசால் அனுமதிக்கப்படாத தோரியம் இலுமினேட்  உள்ளிட்ட  பல தாதுக்களை மண்ணிலிருந்து பிரித்து முறைகேடாக விற்பனை செய்துவந்தனர் என்பது குற்றச்சாட்டு. குறிப்பாக அணு ஆயுதங்கள் செய்யப்பயன்படும் முக்கிய மூலப்பொருட்களை தேசிய பாதுகாப்புக்கு எதிரான வகையில் செயல்பட்டு முறைகேடாக மணல் ஏற்றுமதி செய்து வந்ததும் தற்போது அம்பலமாகி உள்ளது. 

வி.வி.மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜனின் திசையன்விளை அலுவலகம், சென்னை எழும்பூரிலுள்ள கார்ப்பரேட் அலுவலகம், மும்பையிலுள்ள இண்டர்நேஷனல் அலுவலகம், அவர்களுக்குச் சொந்தமான தொலைக்காட்சி அலுவலகம், பெரம்பலூரில் உள்ள வி.வி.சுகர்ஸ் உள்ளிட்ட 88 இடங்களில் வருமான வரித்துறையினர் மற்றும் சி.பி.ஐ.அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

தொடர்ந்து ஒருவாரகாலமாக நடைபெற்றுவந்த இந்த சோதனையின் முடிவில் வெளிநாடுகளில் 8 சுரங்கங்கள் விலைக்கு வாங்கி நடத்தி வந்ததும், தமிழகத்திலிருந்து முறைகேடாக தாது மணல் கடத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது. 

மேலும் 800 கோடி ரூபாய்க்கும் மேல் வரி ஏய்ப்பு செய்ததும், 2500 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் கணக்கில் காட்டப்படாததும் தெரியவந்துள்ளது.  மேலும் இந்தப்பணத்தை வெளிநாடுகளிலுள்ள போலி நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி நடைபெற்ற சோதனையில் சுமார் 8 கோடி ரூபாய்வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.