குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு தனது சொகுசு விடுதியில் அடைக்கலம்அளித்த கர்நாடக எரிசக்தி அமைச்சர் டி.கே.சிவக்குமார் வீட்டில் புதன்கிழமை அன்று தொடங்கிய வருமான வரி சோதனை காலை 10.20 மணியளவில் முடிவடைந்தது.

குஜராத்தில் 8-ம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் பாஜக சார்பில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, காங்கிரஸில் இருந்து விலகிய பல்வந்த் ராஜ்புத் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியின் அரசியல் செயலர் அகமது படேல் போட்டியிடுகிறார். அகமது படேலை தோற்கடித்து பாஜக வேட்பாளர்கள் மூவரையும் வெற்றி பெற வைக்கும் நோக்கில், காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு கோடிக்கணக்கில் குதிரைப் பேரம் பேசப்படுவதாக புகார் எழுந்தது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரே நாளில் 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜக பக்கம் சாய்ந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் மேலிடம், உடனடியாக 44 எம்எல்ஏக்களையும் காங்கிரஸ் ஆளும் மாநிலமான கர்நாடகாவுக்கு அனுப்ப முடிவெடுத்தது.

கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் பெங்களூருவில் வந்திறங்கிய காங்கிரஸ் எம்எல்ஏக்கள், பிடதியில் உள்ள ஈகல்டன் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். கர்நாடக மின்சாரத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமாரும், அவரது தம்பியும் எம்.பி.யுமான டி.கே.சுரேஷ்குமாரும் காங்கிரஸ் எம்எல்ஏக்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாறுவதையும், பதவி விலகுவதையும் தடுக்கும் வகையில் விடுதியை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதன்கிழமை காலை 7 மணியளவில் எம்எல்ஏக்களைத் தங்கள் விடுதியில் தங்கவைத்துள்ள அமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் டி.கே.சுரேஷ் (எம்.பி.) ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தத் தொடங்கினர்.

மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற சோதனை நேற்று காலை 10.20 மணியளவில் முடிவடைந்தது. அமைச்சர் சிவக்குமாரின் வீட்டில் சோதனை முடிந்திருந்தாலும், அவருடன் தொடர்பு கொண்டவர்களுக்குச் சொந்தமான இடங்களில் இன்னும் சோதனை தொடர்வதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

குறிப்பாக சிவக்குமாரின் மாமா திம்மையாவின் மைசூரு வீட்டிலும், தொழிற்சாலையிலும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது

தன்னுடைய வீட்டின் அருகில் குவிந்திருந்த ஆதரவாளர் மத்தியில் இதுகுறித்துப் பேசிய அமைச்சர் சிவக்குமார், ‘‘முதலில் கோயிலுக்குச் செல்ல இருக்கிறேன். அடுத்ததாக என் மீது நம்பிக்கை வைத்து பெங்களூருவில் தங்கியுள்ள குஜராத் எம்எல்ஏக்களைக் காணச் செல்வேன்'' என்று தெரிவித்தார்.

வருமான வரித்துறை சோதனை குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்த சிவக்குமார், ‘‘உண்மையை யாராலும் மறைக்க முடியாது. பின்னர் இதுகுறித்து விரிவாகப் பேசுகிறேன்.

சட்டத்துக்குப் புறம்பாகவோ, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகவோ நான் பணிபுரிந்ததில்லை. என்னுடைய கட்சியை என்றைக்குமே சங்கடத்தில் ஆழ்த்த மாட்டேன். என் தலைவர்கள் தலை குனியும் நிலையை ஏற்படுத்த மாட்டேன்'' என்றார்.