ராமநாதபுரம் தொகுதியில் மோடியை களத்தில் இறக்கும் திட்டத்தில் இருந்து பின் வாங்கும் பாஜக..! காரணம் என்ன.?
நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட திட்டம் வகுக்கப்பட்ட நிலையில், கள நிலவரம் மோசமாக இருப்பதால் அந்த முடிவில் இருந்து பாஜக பின்வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் பணி
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க பாஜக திட்டம் வகுத்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் கைப்பற்ற வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கையை கணக்கிட்டு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தநிலையில் பிரதமர் மோடி எங்கு போட்டியிடலாம் என்ற கேள்வியானது பாஜகவினர் மத்தியில் எழுந்தது. இதற்காக பல கட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே வாரணாசி தொகுதியில் இருந்து பிரதமர் மோடி வெற்றி பெற்றதால் இந்த முறை தென் மாநிலங்களில் குறி வைத்த பாஜக தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்ட தொகுதியில் போட்டியிட வைக்கலாம் என முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
ராமநாதபுரத்தில் மோடி போட்டியா.?
இந்த கால கட்டத்தில் இந்த கருத்தை உறுதி செய்யும் வகையில் தமிழகம் வந்த அமித்ஷா தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமராகலாம் என்ற கருத்தை சொல்லி சென்றார். மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் ராமேஸ்வரத்தில் இருந்து தனது பாதயாத்திரையை தொடங்கியுள்ளார். இதன் காரணமாக பிரதமர் மோடி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அதிகரித்து காணப்பட்டது. ராமநாதபுரம் தொகுதியில் ஏற்கனவே தனித்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் குப்பு ராமு 1 லட்சம் வாக்குகளை பெற்றார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் அதிமுக கூட்டணியோடு சேர்ந்து 3 லட்சம் வாக்குகளை பெற்றார். இருந்த போதும் இந்த தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி 4 லட்சம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
ராமநாதபுரத்தில் வெற்றி வாய்ப்பு எப்படி.?
அதே நேரத்தில் தமிழகத்தை பொறுத்தவரை கோவை மற்றும் கன்னியாகுமரி தொகுதியில் மட்டும் பாஜகவின் வாக்கு சாவடி முகவர்கள் 80 சதவிகிதம் உள்ளனர். ராமாநாதபுரம் தொகுதியில் குறைந்த அளவே உள்ளனர். இதன் காரணமாக தேர்தல் நேரத்தில் கூட்டணி கட்சியை எதிர்பார்க்கும் நிலை பாஜகவிற்கு ஏற்படும் என்ற சிக்கல் உருவானது. மேலும் ராமநாதபுரத்தில் அதிகளவு முக்குளத்தூர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். அவர்கள் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஓட்டு சதவிகிதம் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒரு வேளை ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் அதிமுகவோடு இணைந்து தேர்தலை சந்தித்தால் வாக்கு சதவிகிதம் கூடும் நிலை ஏற்படும்.
இஸ்லாமியர்களின் வாக்கு யாருக்கு.?
மேலும் ராமநாதபுரம் தொகுதியை பொறுத்தவரை இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள தொகுதியாகும். எனவே ராமநாதபுரம் தொகுதியில் மோடியை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி பெற வாய்ப்புக்கு சிக்கல் இருக்கும் என்பதால் இந்த முடிவை பாஜக கைவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருந்த போதும் பாஜக தேசிய தலைமை இன்னும் அதிகாரப்பூர்வு எந்த முடிவையும் எடுக்கவில்லையென கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்