விரைவில் உதயநிதி அமைச்சாராக பதவியேற்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இனி திரைப்படங்களில் நடிக்க போவதில்லையென உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக வெற்றியில் உதயநிதி பங்கு
2011 ஆம் ஆண்டில் அதிமுகவிடம் ஆட்சியை பறிகொடுத்த திமுக அடுத்த 10 ஆண்டுகள் தொடர் தோல்வியை சந்தித்து வந்தது. இதனையடுத்து 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தை கூறப்பட்டது. வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதற்காக உதயநிதிக்கு திமுகவில் இளைஞர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வெற்றியை உறுதிபடுத்தினார். இதனையடுத்து முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற போதே உதயநிதியும் அமைச்சராவார் என கூறப்பட்டது. ஆனால் அப்போது வாய்ப்பு வழங்கப்படவில்லை

விரைவில் அமைச்சரவையில் இடம்
இந்தநிலையில் திமுக அரசு பதவியேற்று கடந்த 7 (மே மாதம்) ந்தேதியோடு ஒரு வருடம் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து அமைச்சரவை விரிவாக்கம் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரிவாக்கம் செய்யப்படவுள்ள அமைச்சரவையில் உதயநிதிக்கு உள்ளாட்சி துறை அல்லது இளைஞர் நலன் விளையாட்டு துறை ஒதுக்கீடு செய்ய இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வருகிற20 ஆம் தேதி திரைப்படம் வெளியாக உள்ளது. இதனையடுத்து தற்போது மாமன்னன் படத்தில் உதயநிதி நடித்து வருகிறார். இந்தநிலையில் அமைச்சர் பதவியை ஏற்க்கப்போவதை உறுதிப்படுத்தும் வகையில், உதயநிதி ஸ்டாலின் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

இது தான் கடைசி படம்
தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த உதயநிதி, தான் நடிக்கும் கடைசி படமாக மாமன்னன் இருக்கும் என தெரிவித்துள்ளார். நிறைய படங்களில் கதையை கேட்டிருந்தாலும் நடிப்பதை நிறுத்திக்கொள்ள திட்டமிட்டு இருப்பதாக கூறியுள்ளார். அரசியல் பணி அதிகமாக உள்ளதால் படங்களில் நடிப்பதை நிறுத்தி கொள்ள முடிவு செய்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். உதயநிதி நடித்து வரும் மாமன்னன் திரைப்பட படப்பிடப்பு விரைவில் முடிவடையவுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அமைச்சரவையில் உதயநிதி பொறுப்பு ஏற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
