அமமுக பொதுக்குழு கூட்டம் தேதி அறிவிப்பு.! நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி.? முக்கிய முடிவு எடுக்க திட்டம்
பாஜக கூட்டணியில் அமமுக இல்லையென டிடிவி தினகரன் தெரிவித்துள்ள நிலையில், ஆகஸ்ட் 6ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் அதிகார போட்டி ஏற்பட்டது. இதனையடுத்து டிடிவி தினகரன் மற்றும் சசிகலா கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அதிமுகவை மீட்கும் வகையில் டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இதனையடுத்து நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் அதிமுகவிற்கு கடும் போட்டியாக அமைந்தார். தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் அதிமுகவின் வாக்கு வங்கியை டிடிவி தினகரன் பிரித்தார். இதன் காரணமாக சுமார் 20க்கும் மேற்பட்ட தொகுதியில் அதிமுக தோல்வியை பெற்று ஆட்சி அதிகாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டது.
இந்தநிலையில் ஓ.பன்னீர் செல்வமும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அவரும் டிடிவி தினகரனோடு இணைந்து செயல்பட இருப்பதாக அறிவித்துள்ளார். இதற்கிடையே கோடநாடு கொலை வழக்கு விசாரணை விரைவுப்படுத்த வலியுறுத்தி ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஓபிஎஸ் அறிவித்துள்ள போராட்டத்தில அமமுகவும் கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும் பாஜக கூட்டணி கட்சி கூட்டத்திற்கு ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதற்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த நெருக்கடி தான் காரணம் என கூறப்படுகிறது. இந்தநிலையில் ஆகஸ்டு 6 ஆம் தேதி அமமுக பொதுக்குழு கூட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமமுக துணை தலைவர் அன்பழகன் தலைமையில் சென்னை மதுரவாயலில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் பொதுக்குழு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு தொடர்பாகவும், ஓபிஎஸ் அணியுடன் இணைந்து அடுத்த கட்டமாக செய்யவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக பொதுக்குழுவில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.