Asianet News Tamil

அப்போ சைதை துரைசாமி சொன்னது உண்மையா? சேகர் ரெட்டி – உதயநிதி சீக்ரெட்ஸ்..!

மணல் குவாரி உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் கொடி கட்டிப்பறக்கும் சேகர் ரெட்டிக்கும் –உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே தொடர்புகள் உள்ளதாக சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி முன்பு ஒரு முறை கூறியிருந்தது தற்போது அனைவர் நினைவிற்கும் வந்து போகும்.

Is what Saidai duraisamy said true? Sekar Reddy - Udayanidhi Secrets ..
Author
Tamil Nadu, First Published May 18, 2021, 11:24 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

மணல் குவாரி உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் கொடி கட்டிப்பறக்கும் சேகர் ரெட்டிக்கும் –உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே தொடர்புகள் உள்ளதாக சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி முன்பு ஒரு முறை கூறியிருந்தது தற்போது அனைவர் நினைவிற்கும் வந்து போகும்.

அதிமுக ஆட்சி காலத்தில் மிக பரபரப்பாக அடிபட்ட பெயர்களில் ஒன்று சேகர் ரெட்டி. ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழகத்தில் மணல், கனிமவளங்களுக்கான குவாரிகளை ஏற்று நடத்தி வருகிறார். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக இருந்து மணல் குவாரி தொழிலில் சேகர் ரெட்டி கொடி கட்டி பறந்தவர். ஜெயலலிதா அரசில் அமைச்சர்களாக இருந்த ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி போன்றோர் தொடங்கி சாதாரண எம்எல்ஏக்கள் வரை கோடிகளையும், லட்சங்களையும் வாரி வாரி கொடுத்தார் என்பது இவர் மீதான பிரதான குற்றச்சாட்டு.

சேகர் ரெட்டி டைரி என்று ஒன்று வெளியாகி ஆளும் கட்சி, எதிர்கட்சி, கூட்டணி கட்சி, சிறு கட்சி, பெரிய கட்சி என்கிற வேறுபாடுகள் இல்லாமல் யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்கிற விவரங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தின. ஆனால் தன்னிடம் அப்படி ஒரு டைரியே இல்லை என்று சேகர் ரெட்டி விளக்கம் கொடுத்தார். இதே போன்று பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சேகர் ரெட்டி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. இதில் கட்டு கட்டாக புத்தம் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பெட்டி பெட்டியாக கிடைத்தது.

பழைய ரூபாய் நோட்டுகளை அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்ற சேகர் ரெட்டி உதவினார் என சிபிஐ வழக்கு தொடர்ந்தது. ஆனால் இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கடந்த ஆண்டு சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்து வழக்கில் இருந்து பின்வாங்கிவிட்டது. அப்போது அறிக்கை வெளியிட்ட எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், பணமதிப்பிழப்பு வழக்கில் இருந்து சேகர் ரெட்டியை விடுதலை செய்தது மத்திய பாஜக அரசுதமிழக அதிமுக அரசுக்கு கொடுத்த பரிசு என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். அதோடு சேகர் ரெட்டியோடு தொடர்புடைய அமைச்சர்கள் எல்லாம் பதவி விலக வேண்டும் என்று பல்வேறு காலகட்டங்களில் ஸ்டாலின் அறிக்கைளை வெளியிட்டுள்ளார்.

ஆனால் திடீர் திருப்பமாக தற்போது அதே சேகர் ரெட்டியை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அத்தோடு அவர் கொடுத்த ஒரு கோடி ரூபாய்க்கான காலோசலையையும் தமிழக அரசின் நிவாரண நிதிக்கு பெற்றுக் கொண்டார் ஸ்டாலின். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்ன என்றால் சேகர் ரெட்டி – மு.க.ஸ்டாலின் சந்திப்பின் போது திமுக இளைஞர் அணிச் செயலாளரும் ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி உடன் இருந்தது தான். சேகர் ரெட்டி தமிழகத்தை பொறுத்தவரை சர்ச்சைக்குரிய ஒரு பெயர்.

அதிமுக சீனியர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் தொடங்கி சசிகலா, தினகரனுக்கும் நெருக்கமானவர். இவரை தொடர்புபடுத்தி தான் கடந்த காலங்களில் அமைச்சர்கள் வீடுகளில் சிபிஐ ரெய்டு நடத்தியது. இப்படி சர்ச்சைக்கு உரிய ஒருவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தே பலருக்கும் ஆச்சரியம் தான். ஆனால் அவருடன் உதயநிதி ஸ்டாலினும் நின்றது தான் பலருக்கும் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அதிலும் குறிப்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சைதை துரைசாமி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சேகர் ரெட்டிக்கும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ்க்கும் தொடர்பு இருப்பதாக சைதை துரைசாமி கூறியிருந்தார்.

தற்போதை அதை உறுதிப்படுத்தும் வகையில் சேகர் ரெட்டியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை உதயநிதி சந்தித்த நிகழ்வு தொடர்புபடுத்தப்படுகிறது. இதில் வேடிக்கை என்ன என்றால் சேகர் ரெட்டி முதலமைச்சரை சந்தித்து ஒரு கோடி ரூபாய் கொடுத்ததை டிஐபிஆர் மூலம் செய்திக்குறிப்பாக புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளர். ஆனால் சேகர் ரெட்டி பெயரில் ரெட்டியை கட் பண்ணி தூக்கிவிட்டு சேகர் என்று மட்டும் குறிப்பிட்டுள்ளது தான் செம காமெடி.

Follow Us:
Download App:
  • android
  • ios