சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியதிற்கு இது தான் காரணம்? ஜெய பிரதீப் புது விளக்கம்..!
மதிப்பிற்குரிய சசிகலா அம்மையார் அவர்களுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தினார்; தற்போது அவர்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்கிறார் என்று ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களை பற்றி ஒரு சிலர் குற்றம் சாட்டுகிறார்கள்.
அதிமுகவுக்கு மிகப்பெரிய சோதனை வரப்போகிறது என்று மன வருத்தத்துடன் புரட்சித்தலைவி அம்மா நினைவிடத்தில் வணங்கிவிட்டு ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார் என ஜெய பிரதீப் விளக்கமளித்துள்ளார்.
இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெய பிரதீப் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- மதிப்பிற்குரிய சசிகலா அம்மையார் அவர்களுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தினார்; தற்போது அவர்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்கிறார் என்று ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களை பற்றி ஒரு சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். அவர்களுக்கு உண்மை நிலையை கடை கோடி கழக தொண்டனின் ஒருவனாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இதையும் படிங்க;- தர்மத்திற்கு சோதனை வரலாம்! ஆனால் வீழ்ந்து விடாது! தர்மம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும்! ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மறைவிற்குப் பிறகு தற்காலிக பொதுச்செயலாளராக மதிப்பிற்குரிய சசிகலா அம்மையார் அவர்கள் பதவி ஏற்றார்கள். அதற்குப் பிறகு ஒரு சில தலைமைக் கழக நிர்வாகிகளின் தூண்டுதலால் தமிழ்நாட்டின் முதலமைச்சராக நீங்கள் வரவேண்டும் என்று அவர்களை மூளைச்சலவை செய்தார்கள். அப்போது ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் போயஸ் கார்டனில் நடந்த கலந்துரையாடலில் தன்னுடைய கருத்தான, "நான் முதலமைச்சர் பதவியை தந்து விடுகிறேன்; ஆனால் அதற்கு தற்போதைய காலச் சூழ்நிலைகள் சரியாக இல்லை" என்று என் மனது சொல்கிறது.
தற்போது கட்சியை வலுப்படுத்த வேண்டிய தருணமாக இருக்கிறது; தாங்கள் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தொண்டர்களை சந்தித்து அவர்களின் பேராதரவுடனும் தமிழக மக்களின் பேராதரவுடனும் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். அதுதான் கட்சிக்கும் தமிழ்நாட்டிற்கும் நலனாக அமையும் என்று தனது கருத்தை எடுத்துரைத்தார். ஆனால் அவருடைய கருத்தை அப்போது யாரும் ஏற்கவில்லை. ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் ஒரு சில தலைமைக் கழக நிர்வாகிகளின் வற்புறுத்தலால் தனது முதலமைச்சர் பதவியை கையெழுத்திட்டு கொடுத்துவிட்டு, கட்சிக்கு மிகப்பெரிய சோதனை வரப்போகிறது என்று மன வருத்தத்துடன் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நினைவிடத்தில் வணங்கிவிட்டு, கழகத்தின் உயிர் நாடியான தொண்டர்களிடம் உண்மை நிலவரத்தை தெரிவிப்பதற்காக நினைவிடம் சென்றார்.
இதையும் படிங்க;- உங்க ஈகோவை கழட்டி வையுங்கள்!பதவிக்காக கட்சியை அடமானம் வைத்து விடாதீர்கள்!யாருக்கு அட்வைஸ் செய்கிறார் ஜெ. நிழல்
அனைவரும் முக்கியமாக கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் அவர் சுயநலத்தோடு பதவிக்காக அங்கு சென்றார் என்றால், ஒரு சட்டமன்ற உறுப்பினரையாவது அவருடன் அழைத்து சென்றிருக்கலாம்; அல்லது தன்னுடைய ஆதரவாளர்களுடன் அங்கு சென்று அமர்ந்து அரசியல் செய்திருக்கலாம்; ஆனால் இவற்றையெல்லாம் அப்போது அவர் செய்யவில்லை. தனி ஒருவராக அங்கு சென்று தன்னுடைய மனதில் தோன்றிய கருத்தை தமிழக மக்களுக்கும் கழகத் தொண்டர்களுக்கும் தெரிவிப்பதற்காக பேட்டியாக கொடுத்தார். அந்தப் பிரச்சனையை அப்போதே கலந்து பேசி, சரி செய்திருந்தால் பிரச்சனைகள் அன்றே முடிவுக்கு வந்திருக்கும்.
ஆனால் அன்றிரவு சுமார் ஒரு மணியளவில் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் திமுகவுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, கட்சிக்கு விரோதமாக செயல்படுகிறார் என்று அவரைக் கட்சியில் இருந்து நீக்கிய அறிக்கை வெளிவந்தது. அதற்குப் பிறகு தான், கழகத்திற்கும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும் உண்மையாக இருந்த என்னை கட்சியில் இருந்து நீக்கி இருக்கிறார்களே என்ற ஆதங்கத்தோடு, நாம் அமைதியாக இருந்தால் கட்சிக்கு நல்லதில்லை என்று தர்மயுத்தத்தை தொடங்கினார்.
இறைவனின் நீதிப்படி குடும்பமாக இருந்தாலும் சரி, தொழில் நிறுவனமாக இருந்தாலும் சரி, ஒரு மக்கள் இயக்கமாக இருந்தாலும் சரி பிரச்சனைகளும் கருத்து வேறுபாடுகளும் வரத்தான் செய்யும். இது உலக நியதி. அனைத்து செயல்களிலும் நிறைகளும் குறைகளும் நிறைந்திருக்கும்; நல்லது கெட்டதும் நிறைந்திருக்கும். அதை தலைமைக் கழக நிர்வாகிகள் உணர்ந்து குறைகளை நிவர்த்தி செய்து நிறைகளை பாராட்டி, அடுத்து வரும் காலங்களில் கட்சியின் நலன் கருதி, தமிழக மக்களின் நலன் கருதி, கழகத் தொண்டர்களின் நலன் கருதி அனைவரும் ஒன்றிணைந்து கட்சியின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் நடைமுறைப்படுத்தி தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒருமித்த கருத்தோடு செயல்பட்டால் தான் நமது கழகம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கனவை நனவாக்கம் வகையில் நூற்றாண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்ய முடியும். ஆகவே கழகத்தின் நலன் கருதி அனைவரும் ஒற்றுமையுடன் கரம் கோர்த்து கழகத்தை தர்மத்தின் வழியில் வழிநடத்த வேண்டும் என்று கடைக்கோடி தொண்டனின் ஒருவனாக அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என ஜெய பிரதீப் கூறியுள்ளார்.