இப்படி ஒரு வெள்ளை அறிக்கையா? சீனியர் அமைச்சர்கள் ஷாக்..! உள்ளாட்சித் தேர்தல் களேபரம்..!
தமிழகத்தை பொறுத்தவரை அரசின் எந்த நலத்திட்டமாக இருந்தாலும் சரி ஆளும்கட்சி சார்ந்தவர்களுக்கு முதலில் கிடைக்க வழிவகை செய்யப்படும். உதாரணமாக தற்போது கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டால் கூட, திமுகவினருக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. அதே போல் அந்தந்த பகுதி திமுகவினர் டோக்கன் கொடுக்கும் நபர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி கிடைப்பதாக சொல்லப்படுகிறது.
இலவச திட்டங்கள் மற்றும் அரசின் மானியம் தொடர்பான திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் புட்டு புட்டு வைத்த நிலையில் சீனியர் அமைச்சர்கள் சிலர் அதிர்ச்சியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசின் கடந்த 15 வருட கால நிதி நிலையை பிடிஆரின் வெள்ளை அறிக்கை தெளிவாக எடுத்துக்கூறியது. அதிலும் எவ்வளவு கடன், எவ்வளவு வருவாய் உள்ளிட்ட விவரங்களை அவர் மிகவும் தெளிவாக எடுத்துக்கூறியுள்ளார். ஆனால் இதனை தவிர்த்து பார்க்கும் போது பிடிஆர் சில முக்கிய விஷயங்களை பேசியுள்ளார். அது இலவச திட்டங்கள் மற்றும் மானியம் என்பதாகும். இந்த இரண்டு விஷயங்கள் தான் செலவுகளுக்கு அதிக காரணம் என்கிற ரீதியில் பிடிஆர் பேசியுள்ளார். மேலும் மானியமாக இருந்தாலும் சரி இலவச திட்டங்களாக இருந்தாலும் சரி ஏழைகள் தவிர்த்து அனைத்து தரப்பினரும் பெறுவது எப்படி சரியாக இருக்கும் என்று பிடிஆர் கூறியுள்ளார்.
அதாவது இத்தனை ஆண்டு காலம் இலவச திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது மற்றும் மானியங்கள் வழங்குவது போன்றவற்றை பிடிஆர் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளார். தமிழகத்தில் இலவச திட்டங்களுக்கு பெயர் போனது கலைஞர் ஆட்சி தான். கடந்த 2006ம் ஆண்டு இலவச தொலைக்காட்சி என்று அவர் கொடுத்த வாக்குறுதி தான் அந்த முறை திமுகவை ஆட்சிப் பொறுப்புக்கு கொண்டு வந்தது. அப்போது இலவச தொலைக்காட்சி, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ ரேசன் அரிசி என அவர் கொண்டு வந்த திட்டங்களை பின்பற்றியே ஜெயலலிதா பல்வேறு இலவச திட்டங்களை செயல்படுத்தினார்.
இந்த நிலையில் தான் மானியம் குறித்தும் பேசியுள்ளார் பிடிஆர். அதாவது பொங்கல் பண்டிகையின் போது ரேசன்கார்டு தாரர்களுக்கு வழங்கப்படும் பணம், அண்மையில் கொரோனா நிவாரணமாக வழங்கப்படும் பணம், இது தவிர ரேசனில் பொருட்கள் வாங்குபவர்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் பொருட்களுக்கு மானியமாக அரசு தான் விலையை ஈடு செய்கிறது. இவை அனைத்தையும் சுட்டிக்காட்டி மானியம் ஏழைகளுக்கு மட்டும் அல்ல பலருக்கும் செல்கிறது என்பதை தெளிவாக எடுத்துக்கூறியுள்ளார். அத்துடன் இதனை சரி செய்ய உள்ளதாவும் பிடிஆர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதாவது இனி மானியமாக இருந்தாலும் சரி இலவசங்களாக இருந்தாலும் சரி தகுதியான பயனாளிகளுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்கிற ஒரு விஷயத்தை பிடிஆர் முன்மொழிந்துள்ளார். இதன் மூலம் போலியான பயனாளிகளுக்கு அரசின் திட்டங்கள் செல்வது தடுக்கப்படும். இதற்கான செயல் திட்டத்தை பிடிஆர் முன்னெடுக்க உள்ளார். அதாவது மோடி அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் சிலிண்டர் மானிய விலையில் கொடுக்கப்பட்டது. இதனால் அரசின் மானியம் தகுதியற்ற நபர்களுக்கு சென்றது.
ஆனால் கேஸ் இணைப்பு எண் ஆதாருடன் இணைக்கப்பட்டு ஒரு ஆண்டுக்கு ஒன்பது சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் என்று மோடி அறிவித்தார். இதன் மூலம் கேஸ் மானியம் பல லட்சம் கோடிரூபாய் மத்திய அரசுக்கு மிச்சமானது. இதே போல் தான் தமிழகத்தில் பயனாளிகளை ஆதார் மூலம் இணைத்து திட்டங்களை செயல்படுத்தினால் தகுதியானவர்களுக்கு மட்டுமே அரசின் திட்டங்கள் செல்லும். பலகோடி ரூபாய் மிச்சமாகும்.
ஆனால் பிடிஆரின் இந்த யோசனை சீனியர் அமைச்சர்கள் பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை அரசின் எந்த நலத்திட்டமாக இருந்தாலும் சரி ஆளும்கட்சி சார்ந்தவர்களுக்கு முதலில் கிடைக்க வழிவகை செய்யப்படும். உதாரணமாக தற்போது கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டால் கூட, திமுகவினருக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. அதே போல் அந்தந்த பகுதி திமுகவினர் டோக்கன் கொடுக்கும் நபர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி கிடைப்பதாக சொல்லப்படுகிறது. இப்படி ஒரு கட்டமைப்பு உள்ள நிலையில் பிடிஆரின் செயல்பாடுகள் அதனை சிதைத்துவிடும் என்று சீனியர் அமைச்சர்கள் சில முதல்வர் வரை விஷயத்தை கொண்டு சென்றுள்ளதாக கூறுகிறார்கள்.