ஜெயலலிதா இருந்த காலத்திலேயே ஐவர் குழுவில் ஒருவராக அசைக்க முடியாத இடத்தில் இருந்தவர் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்.  அ.தி.மு.க.வில் சமீபத்தில் மாவட்ட செயலர்கள், அமைப்பு செயலர் பதவிகளுக்கு நிறைய பேரை நியமித்திருக்கிறார்கள். இதில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலராக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை நியமித்திருக்கிறார்கள். இவர், கட்சியை வழிநடத்த அமைக்கப்பட்ட, 11 பேர் அடங்கிய வழிகாட்டு குழுவில் இருக்கிறார். 

இந்த கமிட்டியின் கீழ் செயல்பட வேண்டிய மாவட்ட நிர்வாகத்துக்கு, அவரையே செயலராக நியமித்தது கேலிக்கூத்தாக உள்ளது என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். இதற்கு மத்தியில், வழிகாட்டுக் குழு, செயல்படாமல் முடங்கி கிடப்பது தனிக்கதை. அதே போல், இந்த நியமனங்களில், முதல்வர், துணை முதல்வர் சார்ந்த சமுதாயத்தினருக்கு தான் அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில், அதிகமாக இருக்கிற நாடார், யாதவர், தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தினருக்கு எந்த வாய்ப்பும் இல்லை கொடுக்கவில்லை என முணுமுணுப்பு கிளம்பியிருக்கிறது.

 

சிவகங்கை மாவட்டத்தில் முக்குலத்தோரில் ஒரு பிரிவினரான கள்ளர் இனத்தை சேர்ந்தவர்களை தவிர வேறு யாரும் முக்கியப்பதவியில் இல்லை. மாவட்ட செயலாளர் செந்தில்நாதனும், அமைச்சர் பாஸ்கரனும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள். அவர்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்களை தவிர வேறு யாரும் பதவிக்கு வரக்கூடாது என்பதால் கள்ளர் இனத்தை சேர்ந்தவர்களை மட்டுமே ஒன்றிய செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பிற சமுதாயத்தினர் இதனால் விரக்தியில் உள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது திருவள்ளூர் மாவட்டத்தில் மாதவரம் மூர்த்தி, ரமணாவுக்கு அமைச்சர், மாவட்ட செயலர் பதவிகளை கொடுத்து, அழகு பார்த்தார். இதில் கலப்பட பால் விவகாரத்துல சிக்கி மூர்த்தியும், குட்கா விவகாரத்தில் ரமணாவும் பதவிகளை இழந்து விட்டனர். ஜெயலலிதா இருந்த வரைக்கும், இருவருக்கும் எந்தப்பதவியும் கொடுக்கவில்லை. தேர்தலில் சீட்டும் கொடுக்கவில்லை. இப்போது, இவர்களிருவருக்கும்  மாவட்ட செயலர் பதவிகளை, முதல்வரும், துணை முதல்வரும் வாரி வழங்கி இருக்கிறார்கள். இதுவும், ஜெயலலிதா விசுவாசிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.