வரி பாக்கி 1.86 கோடி ரூபாயை கட்டச் சொல்லி இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஜிஎஸ்டி ஆணையரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வரி பாக்கி 1.86 கோடி ரூபாயை கட்டச் சொல்லி இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஜிஎஸ்டி ஆணையரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரி செலுத்துவதில் இருந்து தப்பிப்பதற்கே அவர் அம்பேத்கருடன்-மோடியை ஒப்பிட்டு பேசியதாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இந்த தகவல் வந்துள்ளது.
இதுவரை எப்போதும் இல்லாத அளவிற்கு இசையமைப்பாளர் இளையராஜா அரசியல் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். தானுண்டு தன் வேலையுண்டு என இத்தனை ஆண்டுகாலம் அவர் இருந்து வந்த நிலையில், சமீபத்தில் அண்ணல் அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு அவர் புத்தகம் ஒன்றுக்கு முகப்புரை எழுதியுள்ளது கடும் விமர்சன்த்திற்கு ஆளாகியுள்ளது. கடந்த நாற்பதாண்டு காலம் அரசியல் கலப்படமில்லாமல் இசைக்கலைஞராக மட்டுமே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு வந்த இளையராஜா, கடந்த சில தினங்களுக்கு முன்னர் மோடி குறித்த புத்தகம் ஒன்றுக்கு சட்டமேதை பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கருடன் மோடியுடன் ஒப்பிட்டு அப்புத்தகத்தில் முகப்புரை எழுதினார். இது பல்வேறு அரசியல் கட்சி மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தையும் ஆட்சேபனையும் ஏற்படுத்தியுள்ளது.

அம்பேத்கரும் மோடியும் ஒன்றா? சட்டமேதை யுடன் மோடியை ஒப்பிடுவது சரியா? பாஜக இந்துத்துவ அரசியலுக்கு இளையராஜா இப்படி விலை போகலாமா? என்றலெல்லாம் இளையராஜா மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது. இத்தனை ஆண்டு காலம் அரசியல் பேசாமல் இருந்து வந்த இளையராஜா திடீரென அரசியல் பேசுவதற்கான நோக்கம் என்ன என்று கேள்வி எழுப்பும் பலர் அவர் முறையாக வரி செலுத்துவதில்லை, அதிலிருந்து தப்பிப்பதற்காகவே இப்படி மோடிக்கு ஆதரவாக பேசுகிறார்கள் என்று விமர்சித்து வருகின்றனர். ஆனால் இக் குற்றச்சாட்டுக்கு இதுவரை இளையராஜா மறுப்பு ஏதும் கூறாமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில் சென்னையில் உள்ள மத்திய அரசின் ஜிஎஸ்டி புலனாய்வு துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து கடந்த 27 ஆம் தேதி இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு சம்மன் ஒன்று சென்றிருப்பதாகவும், அதில் சேவை வரி கட்டாததால் வரிஏய்ப்பு தடுப்புச் சட்டத்தின்படி விசாரணைக்கு மார்ச்10 ஆம் தேதி காலை 11 மணிக்கு அவர் ஆஜராக வேண்டும் என்றும் , அப்போது தங்களிடம் இருக்கும் ஆதாரங்களை உடன் எடுத்து வருமாறும் அதில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் அந்த சம்மனுக்கு அவர் ஆஜராகவில்லை,

அதேபோல் மீண்டும் மார்ச் 24ஆம் தேதியும் மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது அதிலும் அதே காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கும் இளையராஜா ஆஜராகவில்லை என்றே தெரிகிறது. மீண்டும் இதே காரணத்தை குறிப்பிட்டு மார்ச் 28ஆம் தேதி காலை 11 மணிக்கு ஜிஎஸ்டி புலனாய்வு துறை தலைமை இயக்குநர் சென்னை மண்டல அலுவலகத்தில் ஆஜராக இளையராஜாவுக்கு மூன்று முறை சம்மன் அனுப்ப உள்ளதாகவும் ஜிஎஸ்டி ஆணையரகம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கும் அவர் ஆஜராகவில்லை.
அந்த மூன்று சம்மனுக்கும் இளையராஜா இதுவரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காததால் அவருக்கு இன்று இறுதி நோட்டீசை அதிகாரிகள் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இளையராஜா திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து வரியோடு சேர்த்து கட்டணத்தை பெற்றுள்ளார். ஆனால் அவர் அந்த வரியை ஜிஎஸ்டி ஆணையத்திடம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
