இந்தியாவில் இதுவரையில் 58 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ்  உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இது நாட்டு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. 

உலகம் முழுதும் கொரோனா வைரஸ் 180க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. அது கடந்த சில வாரங்களாக படிப்படியாக குறைந்து வரும் நிலையில் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த வைரஸ் ஐரோப்பிய கண்டங்களில் அதி தீவிரமாக பரவி வருவதால்,  அந்நாடுகளில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கும் சூழல் உருவாகியுள்ளது.  இங்கிலாந்தில் இந்த வைரஸ் பன்மடங்காக வேகமெடுத்துள்ளதால், அந்நாடு நள்ளிரவு முதல் கடுமையான ஊரடங்கு உத்தரவிட்டுள்ளது. 

அதேபோல புதிய வகை வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் தென்படத் தொடங்கியுள்ளது. அது இந்தியாவிலும் மெல்ல பரவத் தொடங்கியிருக்கிறது. கடந்த மாதம் 29ம் தேதி முதல் முறையாக இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து லண்டனிலிருந்து இந்தியாவிற்கு வந்த ஒவ்வொரு பயணியையும் கண்காணித்து, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் முயற்சியில் மத்திய சுகாதாரத்துறை தீவிரம் காட்டி வருகிறது. அதில் பலருக்கும் உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. 

உருமாறிய கொரோனா  பரவியவர்கள் மூலம் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டறிய தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இந் நிலையில் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், நாட்டில் இதுவரை மொத்தம் 58 பேருக்கு உருமாறிய கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.