மதுரைன்னா சும்மாவா! மதுரை கலாச்சாரம் கலை, இலக்கியம், பண்பாடு மட்டும் கற்றுத் தரவில்லை. கட்-அவுட், ப்ளக்ஸ் கலாச்சாரம் நமக்கு கற்று கொடுத்து முதலிடம் பிடித்ததும் அழகிரி பிறந்த நாளில் தான்!

ஜனவரி 30 அழகிரி பிறந்த நாள்.  ஒவ்வொரு வருடமும் "அ" பிறந்த நாள் விழா மதுரையில் இன்னொரு சித்திரை திருவிழா போல் கட்டவுட், போஸ்டர் அதில் உள்ள வாசகங்கள் தொண்டர்களை உற்சாகம் ஊட்டும். அதே நேரத்தில் திமுக தலைமையை மிரட்டும், மிரளும் அளவிற்கு இடம்பெற்றிருக்கும். மதுரை மாநகர் முழுவதும் மருத்துவ முகாம், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டம் உதவிகள் என அழகிரியின் ஆதரவாளர்கள் தூள் கிளப்புவார்கள். 

திமுக ஆட்சி இருந்த காலத்தில் அழகிரி பிறந்த நாள் விழா மதுரையை குலுங்க செய்தது.  ஒவ்வொரு பிறந்த நாள் நிகழ்ச்சியின் போது காந்தி அழகிரி ஏழைபிள்ளைகளுக்கு மதியம்  அன்னதானம் வழங்குவது வழக்கம் வைத்திருக்கிறார். மதுரை, டி.வி.எஸ்.நகரை விட்டு அழகிரி கிளம்பினால்  விழா நடைபெறும் ராஜாமுத்தையா மன்றம் வந்து சேர்வதற்கு குறைந்தது நான்கு மணிநேரம் ஆகும். அந்த அளவிற்கு  தனது பிறந்த நாளை கொண்டாடிய அழகிரிக்கு சோதனைக்காலமாக அதிமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தது. 

கலைஞர் உடல் நிலை மோசமாகத் தொடங்கிய நேரத்தில் இருந்தே திமுக வில் அதிகாரம் யார் கையில் என்கிற அதிகார போட்டி ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் ஏற்பட்டது. அந்த நேரத்தில் அழகிரி ஆதரவாளர்கள் ஓட்டிய போஸ்டர் இவரை கடைசி வரைக்கும் திமுகவிற்குள் ஒட்டவிடாமல் போனது.அழகிரி திமுகவில் எனக்கு பதவி வேண்டும் என்று எத்தனையோ முயற்சி எடுத்து பார்த்தார், கலைஞர் குடும்பத்திற்குள் பெரிய அளவில் விவாதமே நடந்தது. பதவிக்காக கலைஞரிடம் சண்டையிட்டு பார்த்தும் பதவி கிடைக்க வாய்ப்பு அளிக்க மறுத்து விட்டார் ஸ்டாலின். சரி எனக்கு தான் பதவி இல்லை என் மகன் துரைதயாநிதிக்கு இளைஞர் அணி கொடுங்கள் என்று கேட்டுபார்த்தார். ஆனால் மொத்தமாக கதவை சாத்திவிட்டார் ஸ்டாலின். கோபத்தின் உச்சத்தில் தான் திமுக ஒன்றும் சங்கரமடம் இல்லை என்று விமர்சனம் செய்தார் அழகிரி. 

மதுரையை குலுங்க வைத்தவர் பிறந்த நாள் விழா கொண்டாக்கூட இந்த ஆண்டு அவரது ஆதரவாளர்கள் தயாராக இல்லாமல் இருக்கிறார்கள். வழக்கம் போல் தொண்டர்கள் பரபரப்புக்கு பஞ்சம் இல்லா அளவிற்கு போஸ்டர் அடித்திருக்கிறார்கள். அப்படி அடித்த போஸ்டர் தான் இந்த பிறந்த நாளைக்கு ட்ரெண்டாகி வருகிறது. அப்படி என்ன போஸ்டர் அது! sun னோட son னுக்கே தடையா..? ஆசையில் அபாயகரமானது அதிகார ஆசை, அசிங்கமானது துரோக ஆசை! நிஜம் வெல்லும்! நியாயம் உன்பக்கம்! போன்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர் தான் மதுரையை கலக்கி கொண்டிருக்கிறது.

ஜனவரி 30 அழகிரி பிறந்த நாள் மதுரையில் நடக்குமா? என்கிற கேள்வி தொண்டர்களிடையே ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து அழகிரி ஆதரவாளர்களிடம் பேசிய போது... இந்தாண்டு பிறந்த நாள் விழாவை யாரும் கொண்ட யாரும் முன்வரவில்லை. அவரை வைத்து சம்பாதித்தவர்கள் எல்லாம் அமைதியாக இருக்கிறார்கள். 30 ம் தேதி விக்கிர மங்கலம் தோப்புக்கு கூட யாரும் வாழ்த்து சொல்ல வரவேண்டாம் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டார். அதே தேதியில் முத்த வழக்கறிஞரும், அழகிரியின் ஆதரவாளருமான மோகன்குமார் இல்ல விழா மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள மகாலில் நடை பெறுகின்றது. 

அங்கே தான் அண்ணனுக்கு இந்தாண்டு  பிறந்த நாள் விழா நடைபெறும். அன்றை அவர் அறிவிக்கும் அறிவிப்பு தொண்டர்களுக்கும் உற்சாகமாகவும், திமுகவுக்கு அணுகுண்டாகவும் இருக்கும் . திருமண விழா  முடிந்ததும் நேராக திருச்சியில் இருந்து சென்னைக்கு  சொல்வார் என்கிறார்கள் அழகிரி ஆதரவாளர்கள்.

-தெ.பாலமுருகன்