நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்ற அறிவிப்புக்குப் பின் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீண்டும் கூட்டணிக் கட்சிகளை உதாசீனம் செய்யத் தொடங்கியுள்ளார். இதனால், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் கடும் அதிருப்தியிலும், கோபத்திலும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சென்னையில் தங்கி பாஜக கூட்டணி வியூகங்களை வகுத்துவரும் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, தனது நீண்டநாள் நண்பரான வைகோவை அழைத்துப் பேசியிருப்பது திமுக கூட்டணி உடைவதற்கான முதல் நடவடிக்கை என்று பேசப்படுகிறது.

இதை சற்றும் எதிர்பாராத ஸ்டாலினும், திமுக மூத்த தலைவர்களும் பெரும் அதிர்ச்சியில் இருப்பதாகத் தெரிகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வைகோவால் உருவாக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணியால், திமுக தோல்வியடைந்ததைச் சுட்டிக்காட்டும் திமுக தொண்டர்கள், ஐ-பேக் நிறுவனத்தின் யோசனைகளை ஸ்டாலின் கேட்பதால் வைகோ வெளியேறும் சூழல் ஏற்படும் என்ற கலக்கத்தில் இருக்கிறார்கள்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தபோது, கூட்டணிக் கட்சிகளுடன் சமரசமாகப் பேசிவந்த திமுக, மீண்டும் கூட்டணிக் கட்சிகளுக்கும் கடுமையான நிபந்தனைகளை விதித்து வருகிறது. கூட்டணிக் கட்சிகளில் மதிமுகவுக்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும் ஒற்றை இலக்கத்தில் தொகுதி ஒதுக்கப்படும் என்றும், அந்தக் கட்சிகள் திமுகவின் சின்னமான ‘உதயசூரியன்’ சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்றும், மீண்டும் நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஆனால், தனிச்சின்னத்தில்தான் மதிமுக போட்டியிடும் என்று புத்தாண்டு நாளில் வைகோ அறிவித்தார். அதைத் தொடர்ந்து, விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனும் இதே போன்று அறிவித்தார். குறைந்த அளவு இடங்களே ஒதுக்கப்படும் என்பதால் இடதுசாரிக் கட்சிகளும் காங்கிரசும் அதிருப்தியில் இருக்கின்றன.

ஐ-பேக் நிறுவனத்தின் தலைவர் பிரசாந்த் கிஷோருக்கு திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளோ, தமிழ் தேசியம் பேசும் கட்சிகளோ பிடிப்பதில்லை. ஈழப்பிரச்சினையிலும் காவிரி, முல்லைப்பெரியாறு, இந்தி எதிர்ப்பு ஆகிய பிரச்சினைகளில் உறுதியான நிலையை வைகோ எடுப்பதால், பிரசாந்த் கிஷோருக்கு வைகோவைப் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது போன்ற பிரச்சினைகளை திமுக பேசிவந்தாலும், அது ஒப்புக்குப் பேசப்படும் பேச்சுகள் என்பதும் வடமாநிலத்தவரைப் பாதிக்கும் வகையில், திமுக எதுவும் செய்யாது என்பதும், வாக்கு அரசியலுக்காக திமுக தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற அப்படிப் பேசுகிறது என்பதும் பிரசாந்த் கிஷோருக்குத் தெரியும் என்பதால், அவர் திமுகவை ஆதரிக்கிறார்.

ஆனால், வைகோ வடமாநிலத்தவர்களுக்கும், இந்திக்காரர்களுக்கும் எதிர்ப்பானவர் என்று பிரசாந்த் கிஷோர் கருதுவதால் மதிமுக தனிச்சின்னத்தில் போட்டியிட்டு அங்கீகாரம் பெறுவதை அவர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அவர் சொல்வதை திமுக தலைவர் ஸ்டாலினும் கேட்பதால், மதிமுகவுக்கு ஒற்றை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்கவும், அதிலும் ‘உதயசூரியன்’ சின்னத்தில் மதிமுக வேட்பாளர்கள் நிற்கவேண்டும் என அவர் ஸ்டாலினை வற்புறுத்துவதாகவும், அதை ஸ்டாலினும் ஏற்றுக்கொள்வதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

டிசம்பர் முதல் வாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்தபோது, கூட்டணிக் கட்சிகளுடன் ஸ்டாலின் திடீரென்று மென்மையான அணுகுமுறையைக் கடைபிடித்தார். கூட்டணிக் கட்சிகள் ரஜினியுடன் சேர்ந்து மூன்றாவது அணி அமைக்கும் என்ற அச்சத்தில் அவர் கூட்டணிக் கட்சிகளுடன் இணக்கமான போக்கைக் கடைபிடித்தார். ஆனால், ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்று அறிவித்தபின், வேதாளம் மீண்டும் முருங்கைமரம் ஏறியதுபோல் திமுக பழையபடி கடுமையான நிபந்தனைகளை கூட்டணிக்கட்சிகளிடம் விதிக்கத்தொடங்கியுள்ளது.

மதிமுகவும், விடுதலைச்சிறுத்தைகளும், 2011 சட்டமன்றத் தேர்தல் முதல் ஒரு கட்சி மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெறும் அளவுக்கு வாக்குகளையோ, தொகுதிகளையோ பெறவில்லை. இதனால், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரமோ, தனிச்சின்னமோ இல்லாமல் இந்த இரு கட்சிகளும் உள்ளன. வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் 6 சதவீதம் வாக்குகளை வாங்கும் அளவுக்கோ, அல்லது எட்டு தொகுதிகளில் வெற்றிபெறும் அளவுக்கோ இந்த இரு கட்சிகளும் தனிச்சின்னத்தில் போட்டியிட்டால்தான் இழந்த அங்கீகாரம் மீண்டும் கிடைக்கும். அதற்கு அரசியல் எதிர்காலமும் இருக்கும். எனவே, திமுக கூட்டணியில் குறிப்பிட்ட தொகுதிகளைப்பெற்று தனிச்சின்னத்தில் நிற்க மதிமுக தலைவர் வைகோவும், திருமாவளவனும் விரும்புகின்றனர்.

ஆனால், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியதுபோக, குறைந்தது 170 தொகுதிகளில் போட்டியிட திமுக திட்டமிட்டுள்ளது. இத்தனை தொகுதிகளில் நின்றாலும் தனிப்பெரும்பான்மை கிடைக்குமா என்ற சந்தேகம் திமுக தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள், இடதுசாரிக்கட்சிகள் ஆகியோரையும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு திமுக தலைவர்கள் வற்புறுத்திவருவதாக செய்திகள் வந்துள்ளன.

நீண்ட காலம் கழித்து மதிமுகவுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்த்துள்ள தொண்டர்கள் இந்த செய்தியால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் வெங்கையா நாயுடு அழைப்பின் பேரில் வைகோ அவரை சந்தித்துப் பேசியுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவைக் கூட்டம் குறித்து வெங்கையா நாயுடுவிடம் பேசியதாக வைகோ தெரிவித்தாலும், திமுக கூட்டணியை விட்டு வெளியேறுமாறு வெங்கையா நாயுடு ஆலோசனை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி வைகோ மீது மிகுந்த மதிப்பு வைத்திருப்பதாகவும், திமுக கூட்டணியைவிட்டு வெளியேறினால் கௌரவமான எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், பாஜகவுடன் கூட்டணி அமைக்க வைகோ தயங்குவதாகவும், ஆனால் மூன்றாவது அணி அமைக்கத் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. வைகோ மூன்றாவது அணி அமைத்ததால் 2016 சட்டமன்றத்தேர்தலில் திமுக தோற்றது. அதுபோன்ற மீண்டும் வருமோ என்ற கலக்கத்தில் திமுக தலைவர்கள் இருக்கின்றனர்.

வைகோவைப் பொறுத்தவரை கடைசிநேரத்தில் கூட்டணியை விட்டு வெளியேறத் தயங்காதவர். தோல்வியே வரும் என்று தெரிந்தாலும், தனித்துப் போட்டியிடவோ, மூன்றாவது அணி அமைத்தோ களம் காண அவர் கடந்த காலங்களில் தயங்கியதில்லை. தற்போது உறுதியான பாஜக எதிர்ப்பு நிலையை எடுத்துள்ளதால், திமுக கூட்டணியில் அவர் இடம்பெற்றிருக்கிறார். பாஜக இல்லாத கூட்டணியில் சேராத அணியில் சேரவும் அவர் தயங்கமாட்டார். அதிமுகவுடன் அவர் 1998 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2006 சட்டமன்றத் தேர்தலிலும், 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர் ஏற்கனவே கூட்டணியின் இருந்துள்ளார். 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அணியில் இருந்து அவர் வெளியேறினாலும், திமுகவை அவர் ஆதரிக்கவில்லை. அதிமுகவுடன் பாஜக இல்லாமல் போனால் அவர் அதிமுகவுடன் கைகோர்க்கத் தயங்கமாட்டார் என்று கூறப்படுகிறது.

2001 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியைவிட்டுப் பிரிந்து அவர் தனியாக நின்றபோது, அதிமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிரித்து திமுகவைத் தோல்வி அடையச் செய்தார். 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் விஜயகாந்தை சேரவிடாமல், அவருடன் இணைந்து மூன்றாவது அணி அமைத்ததால் மீண்டும் அதிமுக எதிர்ப்பு ஓட்டுகள் சிதறி திமுக தோல்வியை சந்தித்தது. கடந்தகால தேர்தல் வரலாற்றில் பாடம் பெறாமல் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நடந்துகொள்வதால் 2021 தேர்தலில் மீண்டும் திமுக தோற்குமோ என்ற கலக்கத்தில் இருக்கிறார்கள் உடன்பிறப்புகள்.

கொடுக்கும் இடங்களை வாங்கிக்கொண்டு வாயை மூடிக்கொண்டு இருந்தால் கூட்டணியில் இருக்கலாம் என்ற தொனியில் திமுக தலைவர்கள் பேசுவது மற்ற கட்சித் தலைவர்களை அவமானப்படுத்துவது போல் இருக்கிறது என்றும் அக்கட்சியின் தொண்டர்கள் கொந்தளிக்கிறார்கள். எந்தக் கட்சியைத் திமுக வெளியேற்றும் என்று இப்போது தெரியாத நிலையில், கடைசி நேரத்தில் திமுக கழுத்தறுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவிட்டால் என்ன செய்வது என்றும், இப்போதே வெளியேறிவிடலாமா என்றும், கூட்டணித் தலைவர்கள் யோசிக்கத் தொடங்கிவிட்டதையே வெங்கையா நாயுடுவை சந்தித்தது காட்டுகிறது.

இதுவரை கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் ஆகியோரின் ஆலோசனையின்படி தேர்தலை சந்தித்து வந்த திமுக, வரும் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஐ-பேக்கின் ஆலோசனையைக் கேட்டு தேர்தலை சந்திப்பதால் கட்சியிலும் கூட்டணியிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டுவருகிறது. பல ஆண்டுகளாக கட்சியிலும் கூட்டணியிலும் திமுக கடைபிடித்துவரும் கண்ணியமான அணுகுமுறைக்கு வேட்டு வைக்கும் வகையில் ஐ-பேக்கின் ஆலோசனைகள் இருப்பதாக திமுக தலைவர்களும் கூட்டணிக்கட்சிகளின் தலைவர்களும் எண்ணுகின்றனர்.