விருதுநகர்
 
சேலம் - சென்னை பசுமைசாலை திட்டத்தால் மூன்று மணி நேரத்தில் சேலத்திற்கு செல்வதால் தமிழகத்தின் பொருளாதார நிலையில் மாற்றம் ஏற்பட்டுவிடுமா? என்று டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. தமிழக அரசை கேள்வி கேட்டுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுசெயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. நேற்று விருதுநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர், "தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பந்தமாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. இந்த நிலையில், காவலாளர்கள் மீது கூறும் குற்றச்சாட்டை காவலாளர்களே விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது நியாயமாகாது. 

ஸ்டெர்லைட் ஆலைப் போராட்டத்தின்போது சமூக விரோதிகளும், தீவிரவாதிகளும் புகுந்துவிட்டதாக அரசு குற்றம் சாட்டுகிறது. இந்தப் போராட்டம் 100 நாட்கள் நடந்தபோது அரசு இதை கண்காணித்து சமூகவிரோதிகள், தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க தவறியது ஏன்?

ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமில கசிவு பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கூறுகிறார். ஆனால், அமில கசிவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா குழுமம் கூறுகிறது. இவ்வாறு முரண்பட்ட தகவலை தெரிவித்தால் மக்கள் நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்படும்.

சேலம் - சென்னை இடையே பசுமை சாலை அமைக்கும் திட்டம் சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். விவசாயிகளுக்கும், சிறு தொழில்கள் செய்பவர்களுக்கும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். விவசாயம் அழிந்து போகும். 

சேலத்தை சேர்ந்த ஒரு மூதாட்டி கூறுவதைபோல அங்குள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் உயிரையும், மனதையும் வைத்துள்ளனர். அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட்டு பசுமைசாலை திட்டத்தை நிறைவேற்ற துடிப்பது ஏன்? 

சென்னையில் இருந்து மூன்று மணி நேரத்தில் சேலம் வந்து சேருவதால் தமிழகத்தின் பொருளாதார நிலையில் மாற்றம் ஏற்பட்டுவிடுமா?

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் தனது மாவட்ட மக்களைச் சந்தித்து இந்த திட்டத்தை பற்றி விளக்கி கூறி அவர்களின் ஒப்புதலை பெற்ற பின்பு திட்டத்தினை நிறைவேற்ற வேண்டியது தானே? 

காவலாளர்களை வைத்து மிரட்டி விவசாயிகளையும், பொதுமக்களையும் தாக்கி பணிய வைப்பது என்பது ஏற்புடையது அல்ல. காவலாளர்கள் மக்களின் எண்ணத்தை அரசிடம் தெரிவிக்க வேண்டும். ஆனால், காவல்துறை, ஏவல் துறையாக மாறிவிட்டது.

சேலம் பசுமை சாலை திட்டத்தினை எதிர்த்து பேசியவர்களை சமூகவிரோதிகள் என்று கூறுகிறார்கள். சமூக ஆர்வலர் பியூஸ், மாணவி வளர்மதி, நடிகர் மன்சூர்அலிகான் ஆகியோர் மக்களுக்கு ஆதரவாக பேசியதால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இத்திட்டத்தை எதிர்த்து அனைத்து எதிர்கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாங்களும் போராட்டம் நடத்த உள்ளோம். மக்களுக்கு எதிரான திட்டத்தை நிறைவேற்றினால் இந்த ஆட்சி தூக்கி எறியப்படும். உடலில் ஒவ்வொரு பாகமும் படிப்படியாக செயல் இழந்து வருவதை போல இந்த ஆட்சியும் செயல் இழந்து வருகிறது" என்று அவர் கூறினார்.