தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து உள்ளது. மின் சாதனங்கள் உட்பட வீட்டு உபயோகப் பொருட்கள் தண்ணீரில் மூழ்கி இருக்கலாம். இவற்றை மீண்டும் பயன்படுத்துகிறபோது, மிகுந்த கவனம், எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மழைநீர் சூழ்ந்ததால் முக்கியமான பல ஆவணங்கள், சான்றிதழ்கள் சேதம் ஆகி இருக்கலாம். தண்ணீரில் அடித்துக் கொண்டு போய் விடலாம்.

குறிப்பாகக் கல்விச் சான்றிதழ்கள் சேதமாகி இருந்தால், இளைய வயதினர் மற்றும் அவர்களின் பெற்றோர் அதனால், மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகலாம். இத்தகைய சூழல், சிலருக்கு மன உளைச்சலையும், பெருத்த பீதியையும் கூட ஏற்படுத்தலாம். என்ன இருந்தாலும், சான்றிதழ்தானே வாழ்க்கையின் மிக முக்கிய ஆதாரம்..? ஆகையால், அதன் சேதம் (அ) இழப்பு, மன வேதனையை உண்டாக்குதல் இயல்பானதே.
 
இது போன்ற சமயங்களில் இளைஞர்கள், பெற்றோர் மனம் உடைந்து போய், விபரீத முடிவுகளுக்குப் போய் விட வேண்டாம். எந்த ஆவணம் (அ) சான்றிதழாக இருந்தாலும், முறையாக விண்ணப்பித்து, போலி ஆவணம் (அ) சான்றிதழ் பெற்றுக் கொள்ள முடியும். இதற்கான வழிமுறைகள், அவ்வந்தத் துறையின் இணையத்திலேயே விவரமாகத் தரப் பட்டுள்ளன. 

இது தொடர்பாகப் பொது மக்களுக்கு உதவும் பொருட்டு, எழுத்தாளர், கட்டுரையாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, சுமார் 20 பேர் கொண்ட குழு அமைத்து உள்ளார். இவர் முன்னாள் வருமான வரி அதிகாரி; போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சியாளர். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக சென்னை வெள்ளம் வந்த போதும் இவரது நண்பர் குழு  இதே பணியை, முன்னணி செய்தித் தொலைக் காட்சி மூலம் சிறப்பாகச் செய்தது. ஏராளமானோர் இதனால் பயன் பெற்றனர். இது முற்றிலும் இலவசமான முழுக்கவும் சமூகப் பணியாக மட்டுமே ஆற்றப் படுகிறது. இதற்காக பிரத்யேகமான மின்னஞ்சல் முகவரி உருவாக்கப் பட்டுள்ளது.  

அதன் முகவரி – certificatesplease@gmail.com ஆவணம் / சான்றிதழ் இழந்த பாதிக்கப்பட்டோர் இந்த மின்னஞ்சலுக்குத் தகவல் அனுப்பலாம். சுமார் 20 பேர் கொண்ட குழுவின் உறுப்பினர் தொடர்பு கொள்வார். குறிப்பு: பாதிக்கப் பட்டவர் பெண்ணாக இருந்தால், குழுவின் பெண் உறுப்பினர் மட்டுமே தொடர்பு கொள்வார். ஆறுதல், ஆலோசனை, அறிவுரை வழங்குதல் மட்டுமன்றி, சட்டம் விதிமுறைகளுக்கு உட்பட்டு, மாற்றுச் சான்றிதழ்கள் பெறுவது தொடர்பான விளக்கங்கள் அளிப்பார்கள். குழு உறுப்பினர்கள் – அரசு / பொதுப் பணியில் இருப்பவர்கள். கட்டணம் எதுவும் இன்றி, பொதுநலன் கருதி, வழிகாட்டுதல் மட்டுமே வழங்குவார்கள்.

 

பாதிக்கப்பட்டோர் தாங்களே நேரிடையாக அரசுத் துறைகளை அணுக வேண்டும். உதவிக் குழுவின் உறுப்பினர்கள் தலையிட மாட்டார்கள். இலவச ஆலோசனை / வழிகாட்டுதல் மட்டுமே வழங்கப்படும். சான்றிதழ் வழிகாட்டிக் குழு, புயல் ஓய்ந்த அடுத்த நாள், 27/11/2020 காலை 6 மணி முதல் டிசம்பர் 31 நள்ளிரவு வரை செயல்படும். 

விவரங்களுக்கு – பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.
certificatesplease@gmail.com