எதற்கெடுத்தாலும் மத்திய அரசு கருத்துச்சுதந்திரம் அளிக்கவில்லை என பேசும் இடதுசாரிகள் எதிர்க்கட்சிகள்தான் இன்று ஒன்றுதிரண்டு அம்பேத்கர்-மோடி குறித்த இளையராஜாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கருத்துச் சுதந்திரத்திற்காக குரல் கொடுக்கும் இடதுசாரிகள், எதிர்க்கட்சிகள் ஏன் இளையராஜாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். கருத்து சுதந்திரத்திற்காக பேசும் அவர்களால் ஏன் இளையராஜாவின் கருத்தை ஏற்க முடியவில்லை என்றும் அவர் வினா எழுப்பியுள்ளார்.

இசைஞானி என அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறார் இசையமைப்பாளர் இளையராஜா. பல ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் அவரை தமிழ்நாட்டு மக்கள் இசை ஜாம்பவான் என கொண்டாடி வருகின்றனர். இசைஞானி என அழைக்கப்பட்டாலும் அவரின் பேச்சுக்கள், கருத்துக்கள் சில நேரங்களில் விமர்சனத்திற்கும் ஆளாகி வருவது வழக்கம். பிறருடன் பழக தெரியாதவர் இளையராஜா, எவரையும் எடுத்தெறிந்து பேசிவிடுவார் என்ற விமர்சனம் அவர் மீது இருந்து வருகிறது. அவரின் பல மேடைப்பேச்சுக்களே இதற்கு சாட்சி. இந்நிலையில் முதல்முறையாக அவர் கூறியுள்ள அரசியல் கருத்து தமிழ்நாட்டில், தேசிய அளவில் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரையும்- பிரதமர் மோடியும் ஒப்பிட்டு அவர் பேசி இருப்பதுதான் அது.

அதாவது அம்பேத்கர் அண்ட் மோடி என்ற தலைப்பில் ப்ளூகிராப்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலுக்கு இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். அதில் அம்பேத்கரின் கனவுகளையும், சிந்தனைகளை நிஜமாக்கி வருபவர் மோடி என்றும் அம்பேத்கர் இருந்திருந்தால் மோடியை பாராட்டி இருப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த கருத்து பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பலரும் இதை விமர்சித்து வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இளையராஜா பாவம் ஆர்எஸ்எஸ் காரர்கள் அவரை சுற்றிவளைத்திருக்கக்கூடும் என காட்டமாக விமர்சித்துள்ளார். இதேபோல் விமர்சித்துள்ள கம்யூனிஸ்ட் கட்சியில் எம்.பி சுப்பராயன், இசைஞானி என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா? உப்புக்கல்லும்- வைரமும் ஒன்றா உதவாக்கரையும்- மாமனிதரும் ஒன்றா என கூறியுள்ளதுடன் கருப்பு பணம் சேர்ந்து விட்டதால் ஏற்பட்ட அச்சம் காரணமாக இளையராஜாவுக்கு ஏற்பட்டுள்ள பிதற்றல் இது என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் இளையராஜாவுக்கு ஆதரவாக பாஜகவினர் குரல் கொடுத்து வருகின்றனர். பாஜக தேசிய செயலாளர் ஜேபி நட்டா தொடங்கி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை, முன்னாள் இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இளையராஜாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். இந்நிலையில் நடிகை குஷ்புவுக் அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார். சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் குஷ்பு, அதில் அக்கட்சியின் மாநில இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு,

பாரதிய ஜனதா கட்சியின் ஆண்டு தினத்தை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம், அதன் ஒரு பகுதியாக இன்று பட்டினம்பாக்கம் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியை தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து மேற்கொண்டோம் என்றார். அப்போது இளையராஜா குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், எதற்கெடுத்தாலும் மத்திய அரசு கருத்துச்சுதந்திரம் அளிக்கவில்லை என பேசும் இடதுசாரிகள் எதிர்க்கட்சிகள்தான் இன்று ஒன்றுதிரண்டு அம்பேத்கர்-மோடி குறித்த இளையராஜாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கருத்துச் சுதந்திரத்திற்காக பேசும் கட்சிகளால் இளையராஜாவின் கருத்தை ஏன் ஏற்க முடியவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதாவது பாஜகவுக்கு ஆதரவாக பேசும் பலரை திமுக விடுதலைச் சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன ஆனால் இளையராஜாவை போன்று இதுவரை எவருக்கும் இந்த அளவிற்கு பாஜகவில் இருந்து ஆதரவு குரல் எழுந்ததில்லை. ஆனால் இளையராஜாவுக்கு பாஜகவின் தேசிய தலைவர் தொடங்கி குஷ்பு வரை ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர். இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பாஜகவில் இந்த அளவிற்கு ஆதரவு இருக்கிறதா? என்று பலரும் ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர்.