தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளன. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கோவையில் பிரசாரம் செய்வதற்காக கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்துக்கு வந்தபோது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “ரஜினிகாந்த் எடுத்த முடிவு அவருடைய விருப்பம். அதில் கருத்து சொல்ல நான் விரும்பவில்லை. தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கியிருப்பது ஆரோக்கியமான முடிவாகும்.  தொழிலும் நடக்க வேண்டும். அதே வேளையில் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். எனவே இது ஆரோக்கியமான முடிவு.” என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
அதிமுக அரசின் சாதனை விளம்பரங்களைக் குறிப்பிட்டு, தமிழகம் வெற்றி நடைபோடுகிறதா என்று கமலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “தமிழகம் வெற்றி நடைபோட்டிருந்தால் நாங்கள் அரசியலுக்கு வந்திருக்க மாட்டோம்” என்று அவர் தெரிவித்தார்.