கடந்த 26-ம் தேதி பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பாஜகவின் தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிட்டார். இதில் 12 துணைத் தலைவர்கள், 8 பொதுச் செயலாளர்கள், 13 செயலாளர்கள், 23 செய்தித் தொடர்பாளர்கள் உட்பட மொத்தம் 70 பேர் உள்ளனர். ஆனால், இதில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் கூட இடம்பெறவில்லை. இது மூத்த நிர்வாகிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்ப்படுத்தியது. 

பிஹார், தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தேசிய செயலாளராக இருந்த ஹெச்.ராஜா அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால் கட்சியில் அதிருப்தியும் சலசலப்பும் இருந்து வருகிறது.

தற்போது வெளியாகியுள்ள தேசிய நிர்வாகிகள் பட்டியலிலை பார்க்கும் போது கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக பாஜக மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழகத்தை பொறுத்தவரை, முக்கிய பதவிகளை எதிர்பார்த்து காத்திருந்த தமிழக பாஜக மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் போன்றோர் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அவர்களோடு கட்சிப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள கே.டி.ராகவன், வானதி சீனிவாசன், கங்கை அமரன், தடா பெரியசாமி போன்றவர்களும் அதிருப்தியில் உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

திமுகவில் துணை பொதுச் செயலாளராக இருந்து பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமி, அதிமுகவில் இருந்து வந்த முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், பகுஜன் சமாஜ் கட்சியில் எம்.பி.யாக இருந்துவந்த அம்பேத் ராஜன் போன்ற பிற கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்த முக்கிய தலைவர்கள் தங்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என கட்சிக்குள் வருத்தம் தெரிவித்துள்ளனர் என தகவல் வெளிவந்துள்ளது.

இதனால் மாநில தலைவர் எல். முருகனுக்கு பல வழிகளில் நெருக்கடிகள் வருகிறது. முக்கிய பதவிகள் கொடுக்கபடவிட்டால் பிரச்சாரத்திற்கு போக மறுப்பு தெரிவித்து விடுவார்கள் என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே கடந்த 3 நாட்களாக டெல்லியில் முகாமிட்டுள்ள எல்.முருகன், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேசியபொதுச்செயலாளர்கள் பி.எல்.சந்தோஷ், துஷ்யந்த்குமார் கவுதம்எம்பி உள்ளிட்டோரை சந்தித்து பேசியுள்ளார். அதில் குறிப்பாக தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழாவை கொண்டாடியது, ரத ஊர்வலங்கள், வாக்குசாவடி அளவிலான நியமனங்கள் போன்றவற்றில் நிர்வாகிகளின் பங்களிப்பு குறித்து விவரித்துள்ளார்.

அவர்களுக்கு சில பதவிகள் வழங்கினால் தேர்தல் பணியை சுறுசுறுப்பாக செய்வார்கள். பாஜகவில் நல்ல முக்கியத்துவம் கிடைத்தால், நிறைய பிரபலங்களும் கட்சியில் இணைவார்கள் எனவும் தெரிவித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இதுதொடர்பாக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட மேலிடத் தலைவர்களையும் சந்தித்து கோரிக்கை விடுக்க எல்.முருகன் திட்டமிட்டுள்ளார் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எல், முருகனின் இந்த முயற்சியால் சிலருக்கு வாய்ப்புகள் கிடைக்கலாம் என தெரிகிறது.