PFI-க்கு தடை விதித்துள்ள நிலையில் RSS பேரணியா.? மறுபரிசீலனை பண்ணுங்க.. கோர்ட்டில் கதறும் தமிழ்நாடு போலீஸ்.
ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புகள் அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவது உகந்தது அல்ல என காவல் துறை அந்த மனுவில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி கோரிய மனுமீது தமிழக காவல்துறை மற்றும் தமிழக உள்துறை அதில் மௌனம் காத்து வந்தது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது, இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் கடந்த 22ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டார். மேலும் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கலாம் என்றும் காவல்துறைக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.
ஊர்வலத்தில் பங்கேற்கும் எந்த ஒருவரும் எந்த சாதி, மதம் போன்றவற்றை பற்றி தவறாக கருத்துக்களை எக்காரணத்தைக் கொண்டும் பேசக் கூடாது, இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான எந்த கருத்தையும் வெளிப்படுத்த கூடாது, நாட்டின் இறையாண்மை மற்றும் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் எந்த செயலிலும் ஈடுபட கூடாது, அதேபோல் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படாத வகையில் பேரணி நடத்தப்பட வேண்டும், காயத்தையோ, வன்முறையை ஏற்படுத்தும் வகையில் கம்பு, தடி போன்ற எந்த ஆயுதங்களும் பேரணியில் இடம் பெறக்கூடாது.
இதையும் படியுங்கள்: rahul gandhi yatra:ராகுல் காந்தியைச் சந்தித்ததும் மகிழ்ச்சியில் கண்ணீர்விட்டு கதறிய சிறுமி: வைரல் வீடியோ
அதேபோல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், முதலுதவி, ஆம்புலன்ஸ் மற்றும் நடமாடும் கழிப்பறை உள்ளிட்ட தேவையான ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும். பேரணியை வழியில் நிறுத்தவோ அல்லது போக்குவரத்துக்கு இடையூறு செய்யவோகூடாது என ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆர்எஸ்எஸ் தரப்பில், நீதிமன்றத்தில், ஆர்எஸ்எஸ் அமைப்பு என்பது வன்முறையை தூண்டும் இயக்கமல்ல, அது தேச பக்தியை வளர்க்கும் இயக்கம் என்றும், எந்த விதமான வன்முறையும் ஏற்படாது என உறுதியளித்தனர்.
இந்நிலையில் ஆர்எஸ்எஸ் பேரணியை அனுமதிக்கக்கூடாது, அனுமதித்தால் வன்முறை ஏற்படும் என பல்வேறு அரசியல் கட்சிகளும் எச்சரித்து வருகின்றன. குறிப்பாக நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் இணைந்து ஆர்எஸ்எஸ் பேரணிக்கு எதிராக சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தவும் அறிவிப்பு செய்துள்ளனர். எனவேதான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகும் என்ற அச்சத்தால், தமிழக அரசு மாநிலம் முழுவதும் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை விதித்துள்ளது. அதேபோல் விடுதலைச்சிறுத்தைகளின் மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: இறுமாப்போடு பேசும் திமுக அமைச்சர்களுக்கு மக்கள் தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள்.. இபிஎஸ் ஆவேசம்..!
இந்நிலையில்தான் ஆர்எஸ்எஸ் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் அனுமதி பெறப்பட்டுள்ளது, மறுபுறம் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கியுள்ள சென்னை உயர் நீதிமன்றம் தன் உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி தமிழக காவல்துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது, ஏற்கனவே பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தினால் தேவையற்ற பதட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பேரணிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.