திருச்சி சிறுகனூரில் நடந்த திமுக மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், வரவிருக்கும் தேர்தல் 'திமுக vs டெல்லி' யுத்தம் என்றார். தமிழ்நாட்டுக்கு எதிரான NDA கூட்டணிக்கு இங்கு 'நோ என்ட்ரி' என்றும், அதிமுகவை பாஜக விழுங்கப் பார்க்கிறது என்றும் கடுமையாக விமர்சித்தார்.
திருச்சிக்கு அருகே உள்ள சிறுகனூரில் நடந்த திமுகவின் மாநில மாநாட்டில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது, பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை (NDA) அவர் கடுமையாகத் தாக்கினார். தமிழ்நாட்டுக்கு எதிரான கொள்கைகளை அவர்கள் பின்பற்றுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இந்த மாநாட்டில் பேசிய ஸ்டாலின், வரவிருக்கும் தேர்தல் என்பது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் (DMK), 'டெல்லி அணிக்கும்' இடையே நடக்கும் போட்டி என்று குறிப்பிட்டார். தமிழ்நாட்டு அரசியலில் NDA-வுக்கு இடமே இல்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அதிமுகவை சாப்பிடும் பாஜக
மேலும், "அதிமுகவை பாஜக மெல்ல மெல்ல விழுங்கப் பார்க்கிறது. அவர்கள் தங்கள் கட்சியை பாஜகவிடம் அடமானம் வைத்துவிட்டார்கள்," என்று கூறி, அதிமுகவின் நிலை குறித்து பரிதாபப்படுவதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார். "நமக்கு எதிராக இருப்பவர்கள் தமிழ்நாட்டுக்கே எதிரானவர்கள். தமிழ்நாட்டுக்கு நல்லது செய்ய மறுக்கும் NDA-வுக்கு மக்கள் எப்படி வாக்களிப்பார்கள்? அவர்கள் எப்படி இங்கு வந்து வாக்கு கேட்க முடியும்? உங்களுக்கு இங்கு எப்போதும் 'நோ என்ட்ரி' தான். இந்தத் தேர்தல் தமிழ்நாடு vs NDA; திமுக அணியா அல்லது டெல்லி அணியா என்பதுதான் போட்டி. திமுக தேர்தலுக்காக மட்டும் மக்களை சந்திக்கும் கட்சி அல்ல," என்றார். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சியின் வெற்றி வாய்ப்பு குறித்தும் ஸ்டாலின் நம்பிக்கையுடன் பேசினார்.
வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்
"நாங்கள் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று நான் அடிக்கடி கூறுகிறேன். நாங்கள் 200 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி," என்றார் ஸ்டாலின். பாஜகவின் அணுகுமுறை மற்றும் அதிமுகவின் நிலை குறித்தும் ஸ்டாலின் விமர்சித்தார். "அதிமுகவால் தங்கள் கூட்டணியின் பெயரைக் கூட சொல்ல முடியாத நிலையில் உள்ளது. பாஜக தலைமையிலான மத்திய அரசு, நமது உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு எந்த நிதியையும் வழங்கவில்லை. ஆளுநர் மூலமாகவும், ரெய்டுகள் மூலமாகவும் பாஜக நமக்கு பிரச்சனைகளை மட்டுமே கொடுத்தது," என்றும் முதல்வர் ஸ்டாலின் மேலும் கூறினார். தனது அரசின் நலத்திட்டங்களை எடுத்துக்கூறிய முதல்வர் ஸ்டாலின், அவை தேர்தல் வாக்குறுதிகளை எப்படி வடிவமைக்கின்றன என்பதையும் விளக்கினார். "மற்ற அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை தவணை முறையில் வெளியிட்டு வருகின்றன. அவர்களுக்கு வேறு வழியில்லை. நாங்கள் அறிமுகப்படுத்திய திட்டங்களை அவர்களால் மாற்ற முடியாது.
எதையும் நிறுத்த முடியாது
மகளிர் உரிமைத் திட்டத்தை அவர்களால் நிறுத்த முடியுமா? நிறுத்தினால், அவர்களது குடும்பப் பெண்களே அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றிவிடுவார்கள். காலைச் சிற்றுண்டித் திட்டத்தை நிறுத்த முடியுமா? இலவச மகளிர் பேருந்து திட்டத்தை மாற்ற முடியுமா? ஸ்டாலினின் திட்டங்கள்தான் அவர்களின் தேர்தல் வாக்குறுதிக்கே கன்டென்ட் கொடுக்கிறது. இந்தத் திட்டங்கள் இருக்கும் வரை, ஸ்டாலின்தான் மாநிலத்தை ஆள்கிறான். நாங்கள் எங்கள் திட்டங்களை செயல்படுத்திய பிறகே வாக்கு கேட்கிறோம்," என்று அவர் உறுதியாகக் கூறினார். மொத்தம் 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு 2026-ஆம் ஆண்டின் முதல் பாதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, பாஜக-அதிமுக தலைமையிலான NDA கூட்டணியை எதிர்த்துப் போட்டியிடும்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (TVK) கட்சியின் வருகையால், இந்தத் தேர்தல் மும்முனைப் போட்டியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021 தேர்தலில், திமுக 133 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 18, பாமக 5, விசிக 4, மற்றும் பிற கட்சிகள் 8 இடங்களில் வெற்றி பெற்றன. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி (SPA) மொத்தமாக 159 இடங்களைக் கைப்பற்றியது. அதே சமயம், NDA கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் அதிமுக 66 இடங்களுடன் கூட்டணியின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது.


