தமிழ்நாட்டில் உளவுத்துறை. காவல்துறை- இருக்கிறது, முதல்வர் இருக்கிறார் அவர்களுக்கெல்லாம் இல்லாத சமூக அக்கறை ஆளுநர் ரவிக்கு வந்துவிட்டதா என்ன? இங்கு பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா குறித்து பதற்றமான செயல்பாடுகளோ சர்ச்சைகளோ இல்லாத நிலையில் ஆளுநர் பேச வேண்டிய தேவை என்ன இருக்கிறது?

ஆளுநர் ரவி ஆர்.எஸ்.எஸின் அசல்முகமாகவே தொடர்ந்து செயலாற்றுகிறார். இனியும் நாம் பொறுத்துக்கொண்டு வேடிக்கைப் பார்க்கக் கூடாது என கருணாஸ் கூறியுள்ளார்.

ஆபத்தான இயக்கம்

இதுகுறித்து முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இந்திய ராணுவத்தில் பணியாற்றி மறைந்த லெஃப்டினென்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ரா எழுதிய The Lurking புத்தக வெளியீட்டு விழா கடந்த 06.05.2022 அன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பை குறித்து, இது மிகவும் ஆபத்தான இயக்கம். மாணவர்களைப் போலவும், மனித உரிமை இயக்கம் போலவும் அரசியல் இயக்கம் போலவும் முகமூடிகளை அணிந்து கொண்டு நாட்டில் இயங்கி வருகிறது.

முழு நேர அரசியல்வாதியா?

இந்த இயக்கம் தீவிரவாத இயக்கங்களுக்குப் பின்புலமாக இயங்குகிறது. பல நாடுகளுக்கு தீவிரவாதத்துக்கு ஆள்களை அனுப்புகிறது என்றெல்லாம் ஆளுநர் ஆர்.என்.ரவி கொக்கரித்துள்ளார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆர்.என்.ரவி ஆளுநரா? இல்லை முழு நேர அரசியல்வாதியா? அவர் வகிக்கும் பொறுப்பை காலில் போட்டு மிதித்துவிட்டு, தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் வேலையில் இறங்கியிருப்பது அருவறுக்கத்தக்கது. ஆளுநர் ரவி ஆர்.எஸ்.எஸின் அசல்முகமாகவே தொடர்ந்து செயலாற்றுகிறார். இனியும் நாம் பொறுத்துக்கொண்டு வேடிக்கைப் பார்க்கக் கூடாது.

கருணாஸ் கண்டனம்

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா ஒரு மக்கள் இயக்கம், அது விளிம்புநிலை மற்றும் சிறுபான்மை மக்களுக்காக ஜனநாயக வழியால் செயல்படும் பேரியக்கம் சாதி மதம், இனம் பாராது மக்களுக்கு தொண்டாற்றுகிறது. மழை பெருவெள்ளம், பேரிடர் காலங்களிலும், கொரோனா நோய்த்தொற்று காலத்திலும் மக்கள் முன் நின்ற ஓர் அமைப்பு பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா! அதுமட்டுமல்ல, மனித உரிமைச் செயல்பாடுகள். சமூக முன்னேற்றம், அனைவர்க்கும் கல்வி எனப் பல்வேறு பணிகளை முன்வைத்து பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா செயல்படுகிறது என்பதை யாவரும் அறிவர்.

ஆர்.எஸ்.எஸ் ஆக இருக்கிறார்

பாப்புலர் ஃபிரண்ட் அமைப்பு மக்கள் முன் வெளிப்படையாக இயங்குகிறது. ஆனால் ஆளுநர் ஒருநாள் கூட வெளிப்படையாக இல்லை. ஆர்.எஸ்.எஸ்.ஆகவே இருக்கிறார். தமிழ்நாட்டு மக்களின் உரிமைப் பிரச்னைகளையும் உணர்வுகளையும் புரிந்து கொள்ளாமல் சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்களை நீண்டகாலமாக கிடப்பில் போட்டு சாதிக்கிறார். தி.மு.க. அரசை செயல்படவிடாமல் தடுக்க கமுக்கமான பல்வேறு வேலைகளை அமைதியாக செய்கிறார். தமிழ்நாட்டில் உளவுத்துறை. காவல்துறை- இருக்கிறது, முதல்வர் இருக்கிறார் அவர்களுக்கெல்லாம் இல்லாத சமூக அக்கறை ஆளுநர் ரவிக்கு வந்துவிட்டதா என்ன? இங்கு பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா குறித்து பதற்றமான செயல்பாடுகளோ சர்ச்சைகளோ இல்லாத நிலையில் ஆளுநர் பேச வேண்டிய தேவை என்ன இருக்கிறது?

ஏதாவது விண்பழி சுமத்த திட்டம்

காரணம் வேறொன்றுமில்லை. தி.மு.க. அரசின் மீது ஏதாவது விண்பழி சுமத்த வேண்டும். அதன் வழியாக தமிழ்நாட்டில் மதக் கலவரத்தை தூண்டவேண்டும். இந்த அடிப்படையில்தான் தமிழ்நாட்டை குறிவைத்திருக்கிறது சங்பரிவாரக் கூட்டம்! ஆளுநர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளைவிடவும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. குறிப்பாக, பிரக்யா சிங் தாகூர் மீதான குண்டுவெடிப்பு வழக்கு ஒன்பதுக்கும் மேற்பட்ட குண்டுவெடிப்பு வழக்குகளில் தொடர்புடைய அபினவ் பாரத் என்ற சங்பரிவார் அமைப்பு ஆகியவை குறித்தும் காவி தீவிரவாதம் பற்றியும் நாடாளுமன்றத்திலேயே பேசப்பட்டுள்ளது. இதைப் பற்றியெல்லாம் ஆளுநர் பேசுவாரா? பேசமாட்டார் ஏனென்றால் தீவிரவாதிகள்தான். மிதவாதிகளை பார்த்து தீவிரவாதி என்பார்கள்!

மத ரீதியான அரசியல்

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மீதான இந்த வன்மமான குற்றச்சாட்டுகளை நாம் மறுப்பதோடு மட்டுமல்லாமல், ஆளுநர் பதவியிலிருந்து ஆர்.என்.ரவி நீக்குவதற்கு மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும் தமிழ்நாட்டு உரிமைகளுக்கு ஆளுநர் பொறுப்பு தொடர்ந்து தடைக்கல்லாக இருக்கிறது என்பதையும் நடுவண் அரசுக்கு நாம் உணர்த்தவேண்டும். தமிழ்நாட்டில் வன்முறைக்கு விதைபோட ஆர்.எஸ்.எஸ் சங்க பரிவாரக் கும்பல் இறங்கிவிட்டது. மத ரீதியான அரசியலை தீவிரப்படுத்துவதற்கான தொடக்கமாகவே ஆளுநர் பேச்சு அமைந்திருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். பா.ஜ.க.வின் மத அரசியலை தமிழ்நாட்டில் பெரும் நோய்த்தொற்றாக பரப்ப பல்வேறு வேலைகளை தொடங்கிவிட்டார்கள் நாம் விழிப்போடு இருக்கவேண்டும்!" என கூறியுள்ளார்.