ரஜினிகாந்த், தனது ஆன்மீகப் பயணத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளை, ஆவணப்படமாக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ, கட்சி துவக்கத்தின்போது தொண்டர்களிடம் வழங்க உள்ளதாகவும் தெரிகிறது.

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக அரசியலுக்குள் நுழைவதாக கூறி வந்த நடிகர் ரஜினிகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இதனை அடுத்து, தனது ரசிகர் மன்றங்களை, மக்கள் மன்றமாக மாற்றினார். 

ஆன்மீக அரசியலை முன்னிலைப்படுத்தப்போவதாக அறிவித்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். ஆன்மீகத்தை முக்கியமாக வைத்து அரசிய்ல செய்யப்போவதாக கூறி வருகிறார்.

இதனைத் தொடர்ந்து கட்சி துவங்குவதற்கு முன் இமயமலை அடிவாரத்தில் இருக்கும் பாபா கோயிலுக்கும், அங்குள்ள குகைகளுக்குள் இருக்கும் சித்தர்களை சந்திக்க ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு விட்டு சென்னை திரும்பி இருக்கிறார்.

ஆன்மீக பயணம் சென்றபோது, அவர் வடகிழக்கு மாநிலங்களுக்கும் சென்று, அங்குள்ள ஆன்மீக தலங்களுக்கும் சென்று திரும்பியுள்ளார். ஆன்மீக பயணத்தின்போது, ரஜினிகாந்த் வழக்கத்துக்கு மாறாக, தனது மொத்த ஆன்மீகப் பயணத்தை வீடியோ பதிவாக்கி திரும்பியுள்ளாராம். 

அந்த வீடியோ பதிவுகளை, தனக்கு நெருக்கமான சினிமா நண்பர்களிடம் கொடுத்து, அதை ஆன்மீக ஆவணப்படமாக்க கேட்டுக் கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த், கட்சி துவங்கும் நேரத்தில் இந்த ஆவணப்பட சிடியை ரசிகர்களுக்கு இலவசமாக வழங்கும் திட்டமும் உள்ளதாக தெரிகிறது.