தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் அதிகபட்சமாக ஒன்றரை வருடங்களே இருக்கும் நிலையில் இதோ அடுத்த மாதம் இரண்டு சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. விக்கிரவாண்டி, நாங்குநேரி இரண்டும்தான் அந்த தொகுதிகள். இதில் நாங்குநேரி தொகுதிக்கான இடைத்தேர்தல் அவசியமில்லாமல் வந்திருக்கும் ஒன்று! என்பதே அரசியல் பார்வையாளர்கள், விமர்சகர்களின் கருத்து. 

ஏன்? என்று அவர்களையே கேட்டபோது “ ஒரு தொகுதியின் எம்.எல்.ஏ. மறைந்துவிட்டால் அங்கே இடைத்தேர்தல் நடத்திடுவதில் தப்பில்லை. ஆனால் நாங்குநேரியில் ஏன் இடைத்தேர்தல் வந்திருக்கிறது என்பதை கவனியுங்கள். நம் ரத்தம் கொதிக்கும். நாங்குநேரி தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஹெச்.வசந்தகுமார். அந்த பதவியில் இருக்கும்போதே நாகர்கோவில் எம்.பி. தொகுதிக்கு விண்ணப்பித்தார். சரி ஏதோ ஆசைப்பட்டு கேட்கிறார்! என்று கடந்து போய்விடாமலும், என்னமோ அந்த தொகுதியில் வசந்தகுமாரை விட்டால் நிறுத்தப்பட ஆளே இல்லை என்பது போலவும் அவருக்கே ஸீட் கொடுக்கிறது காங்கிரஸ் தலைமை. வெற்றி பெற்ற வசந்தகுமார் தன் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு எம்.பி. ஆகிவிட்டார். உலகம் எவ்வளவோ வளர்ந்து, மாறிவிட்ட சூழலில் என்ன மாதிரியான புத்தி பாருங்கள் இது!

வசந்தகுமார் ‘வசந்த் அண்ட்கோ’ எனும் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களின் தலைவர். சிறிய இடத்திலிருக்கும் தன் கடையை பெரிய இடத்துக்கு மாற்றுவது அவருடைய பிஸ்னஸ் ட்ரிக். அதன் லாப நஷ்டங்கள் அவருடைய பாக்கெட்டை மட்டுமே  சேரும். ஆனால் பொதுவாழ்க்கைகு வந்துவிட்ட இடத்தில், மக்களின் பணத்தில் நடக்கின்ற தேர்தலிலும் இப்படி ’சிறிது! பெரிது’ என்று வர்த்தக விளையாட்டு விளையாடுவது எந்த விதத்தில் நேர்மையானது? 

நாங்குநேரி மக்கள் தனக்கு தந்த வாய்ப்பை முறையாய் பயன்படுத்தி சேவையை பண்ண வேண்டிதானே? சரி எம்.பி. பதவிதான் வேண்டுமென்றால், சட்டமன்ற தேர்தலில் ஏன் நின்றார்? வெயிட் பண்ண முடியாதா. சரி நடந்தது  நடந்துடுச்சு, இனி பேசி பலனில்லை. வசந்தகுமார் எனும் தனி மனிதனின் அபிலாஷைக்காக, காங்கிரஸ் எனும் இயக்கத்தின் தலைமையின் சிந்தனையில்லாத நிர்வாகத்துக்காக மக்கள் வரிப்பணத்தின் தலையில் இந்த இடைத்தேர்தலுக்கான பல கோடி ரூபாய் செலவு விடிகிறது. எனவே பல கோடிகளின் அதிபதியான வசந்தகுமாரிடம் இந்த இடைத்தேர்தலுக்கான செலவை வசூல் செய்ய வேண்டும், அல்லது காங்கிரஸே அதை கொடுக்க வேண்டும். 

இந்த நாட்டிலேயே முதல் முறையாக வசந்தகுமார்தான் இப்படி செய்திருக்கிறார் என்று சொல்லவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தர்மபுரி எம்.பி.யாக இருந்த அன்புமணி, அதே தொகுதியில் சட்டசபைக்கு எம்.எல்.ஏ. பதவிக்கு போட்டியிட்டார். காரணம், அந்த தேர்தலில் தங்கள் கட்சி தாறுமாறாக ஜெயித்துவிடும், தான் தமிழக முதல்வராகிடுவோம்! எனும் நப்பாசையில். ஆனால் எம்.எல்.ஏ. தேர்தலில் தோற்றவர், தப்பித்தோம் பிழைத்தோம் என்று தனது எம்.பி. பதவியை தக்க வைத்துக் கொண்டார். ஆக இப்படித்தான் இருக்கிறது இந்த செல்வந்த அரசியல்வாதிகளின் அரசியல் விளையாட்டு. அதிலும் வசந்தகுமார் கோஷ்டி செய்து வரும் செயல்கள் ஓவர் கடுப்பை ஏற்றுது. அவரது ராஜினாமால் நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் நிலையில் அதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட அவரது சொந்த அண்ணனான குமரி அனந்தன் விருப்ப மனு வாங்கியுள்ளார். 

எம்.எல்.ஏ. பதவியை 4 முறையும், எம்.பி. பதவியை ஒரு முறையும் அனுபவித்தவர்தான் இவர். 87 வயதாகிவிட்ட நிலையில் மீண்டும் எம்.எல்.ஏ.வாக ஆசைப்படுகிறார். சரி இவராவது பூரண மதுவிலக்கு, மீனவர் பிரச்னை, நெசவாளர் பிரச்னை ஆகியவற்றுக்காக தள்ளாத வயதிலும் போராடும் நல்ல மனிதர். ஆனால், வசந்த குமாரின் மகனான நடிகர் விஜய் வசந்தும் இந்த தொகுதியில் போட்டியிட பெரியப்பாவுக்கு எதிராக விருப்ப  மனு வாங்கியுள்ளார். என்ன தைரியம் பாருங்கள்!

நாங்குநேரி தொகுதியை வசந்தகுமார் வகையறா என்ன தங்கள் கடைகளின் குடோன் என்று நினைத்துள்ளதா? காங்கிரஸை எடுத்ததுக்கெல்லாம் குற்றம்சாட்டும் மாஜி தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை இப்படி தனது அப்பாவும்,சித்தப்பாவும், மருமகனும் ஆடும் ஆட்டத்துக்கு என்ன விமர்சனம் தரப்போகிறார்?! என்று பார்ப்போம்.” என்கிறார்கள். 
சூப்பரப்பு!